Wednesday, May 5, 2010

தழும்புகள்.......

உணர்வுகளின் வேகத்தில்
உரையாடும் உறவுகளுக்கு..
வரலாறாய் வாழ்ந்த
தலைவர்கள்
தங்களின் தவறுகளுக்கு
தடயங்களை விட்டு செல்வதில்லை
ஆனால்
தழும்புகளை விட்டு செல்கிறார்கள்…..

தடயம் தவிர்த்த
தழும்புகள்..
வருட்த்திற்கொருமுறை
வடிவங்கள் மாற்றிக்கொள்ளும்
ஆனாலும்
வலிகளை மீட்டிச்செல்லும்……

கனத்த போர்வையினை
கண் மீது கட்டிக்கொண்டு
இருட்டென கூறாதீர்…
யாரும் இங்கு நல்லவரில்லை..
யாரும் இங்கு தீயவரில்லை….

அரசியலில்
உணர்வுகளின் நிலையைவிட
அறிவுகளின் நிலைதான்
ஆட்சி செய்கிறது….
ஏனெனில் உணர்வுள்ளவன்
தொண்டனாகிறான்…
அறிவுள்ளவன் தலைவனாகிறான்…

உணர்ச்சிவசப்படும்போது
தன்னிலை மறத்தலியல்பு…
எனினும் தன்னிலை மறந்த
வார்த்தைகள்..முன்னிலும்
நிலையை மோசமாக்கும்…
"யாகாவாராயினும் நாகாக்க…"

வாள்முனையின் காயத்தை விட
வார்த்தைகளின் காயங்கள் வலிவானவை
அழியாத தழும்புகளை
அடையாளமாய் விட்டுச்செல்லும்..
கவனம்…
வாழ்வில் மட்டுமல்ல
வார்த்தகளிலும்தான்….

ஓ..மனிதா.....

ஓ..மனிதா.....
கால் கொண்டு நிலம் கடந்தாய்....
கலம் கொண்டு நீர் கடந்தாய்....
மதி நுட்பத்தால் விண்ணும் கடந்தாய்........
எனினும்...
உடல் கொண்டு
உயிர் கடைந்து...
உன்னுள்ளிருக்கும்
"நான்"
கடப்பதெப்போது..?????

என் மனமென்னும் காடு......

நாற்புறமும்
அகழியால் சூழப்பட்ட
கோட்டை போலவே
பொய்களால் வேயப்பட்ட
வேலிகளால் சூழப்பட்டிருக்கிறது
என் மனமென்னும் காடு.....

எண்ண விருட்சங்கள்,
ஆசை ஓடைகள்
அலங்கரிக்கும் காட்டில்
ரசனையெனும் பறவைகளோடு
வலம் வந்து கொண்டிருக்கின்றன
கோபமுடன் பொறாமை கலந்த
பொல்லாத மிருகங்கள்.......

அறிவுச் சூரியனின்
கதிர்கள் புகாதபடி
வளர்ந்து கிடக்கின்றன
ஆசை மரங்கள்.
ஆசை மரங்களின்
நிழல்களுக்குள்ளே
மண்டிக்கிடக்கின்றன
கொடிய விஷச் செடிகள்...

காட்டின் எல்லைகள்
கட்டுப்படுத்தவில்லை
என் ரசனைப் பறவைகளை...
அந்தப் பறவைகள்..
நீண்ட தொலைவுகளையும்
தொட்டுத் திரும்புகின்றன....

கோப மிருகங்களின்
பந்தாட்டத்தில் பலியாயின
அவ்வப்போது
சில ஆசை மரங்கள்...
ஆனாலும் விழுதுகளைக் கொண்டே
விளைந்து விடுகின்றன மீண்டும்...

காடு திருத்திக் கழனியாக்கவே
அரும்பாடு படுகிறேன் நான்
வானம் பார்த்த விவசாயியாய்
தோல்விகளையும் ஏமாற்றங்களையுமே
சந்தித்தாலும்
அடுத்த பருவத்திலாவது
அறுவடை செய்யலாம்
என்று ஆறுதலடைகிறேன்....

அல்லவை நீக்கி நல்லவை
தளைக்கவே ஆசைப்பட்டு
விஷச் செடிகளை
வேரோடு பிடுங்குகிறேன்....
ஒவ்வொரு செடியும்
வலிகள் கலந்த அனுபவங்களோடே
விடை பெறுகின்றன....

தொடர் தோல்விகளால்
துவண்டு விடாமல்
வேதாளம் வென்ற விக்கிரமாதித்தனாய்
விடாது முயல்கிறேன்...
நம்பிக்கையை விடாது முயல்கிறேன்....

என்றாவது ஓர் நாள்..
காடு திருத்தப்படும்
கனவுகள் மெய்ப்படும்.
நிழல்தரு தருக்களோடு....
கனி தரும் செடிகளோடு....
தாகம் தணிக்கும் ஓடையோடு....
கூடி விளையாடும் விலங்குகளோடு....
பாடித்திரியும் பறவைகளோடு....

பூத்துக்குலுங்கும் கொடிகளோடு
பூரித்துக்கிடக்கும்
என் மனமென்னும் காடு......

எங்கள் மீது பாயாதீர்…....

யார் வந்து போயென்ன??
ஐ.பி.எல் ல் அடங்கிருக்கிறது
எங்கள் ஆவி…..

தலைவனின் தாய் வந்தாராம்
யார் சொன்னது…???

தலைவனின் தாய் வந்தால்
சுவரொட்டி கூட ஒட்டப்படாமலிருக்குமா?
சுவரொட்டி கூட ஒட்டப்படவில்லையெனில்
வந்தது தலைவனின் தாயாய்த்தானிருக்குமா???

அட அப்படியேதானிருக்கட்டுமே…
வந்தவரை நாங்கள் சிறையிலடைக்கவில்லையே..
திருப்பி அனுப்பியிருக்கிறோம்
இதிலிருந்தே தெரியவில்லையா???
எங்களின் தயாளகுணம்..???

எப்பொழுது எது நேரினும்
உடனே எங்கள் மீது பாயாதீர்…

நாங்கள்
உடன் பிறப்பான ரத்தத்தின் ரத்தங்கள்..
கைராட்டை நூலோடு
உருண்டு கொண்டிருப்பவர்கள்…
உங்களுக்கு என்ன தெரியும்
எங்கள் நிலை…?????

ஒருவனின் தீக்குளிப்போடு
மயிர் நீத்த கவரிமானாய்
மானம் நீர்த்துப்போனோம்…

வாழும் பிணங்களோடு
வாதம் செய்யாதீர்….

சூதும் அதன் சூழலும்
அறிவோம் எனினும்
விதியின்மேல் பழி போட்டு
வீட்டுக்குள் முடங்கிக்கொள்வோம்

ஏனெனில்
நாங்கள் இந்தியனாய் பிறந்துவிட்ட
தமிழர்கள்……

முகம்..????

முகம் கொண்டு எடைபோட்டு..
முகம் கொண்டு மதிப்பிட்டு
முகம் கொண்டு பழகியதில்…
அகம் மட்டும் புரியவில்லை…

முகம் கண்டு மயங்குகிறோம்
முகம் கண்டு முயங்குகிறோம்
முகம் கண்டு அலைகின்றோம்
அகம் காண தயங்குகிறோம்….

முகம் காண அலைந்திருந்து
முகம் காண தவித்திருந்து
முகம் காண காத்திருந்தோம்..
அகம் காண அறியவில்லை

சுயங்கள் கொண்ட முரண்கள்........

மழை நாளின்
அந்தி வேளையில்
மழை நீரோடும்
மண் மணத்தோடும்
சந்தித்துக்கொண்டோம்......

மழை நீரில் நனைவது
பற்றி நனையாமல்
பேசிக்கொண்டிருந்தோம்...
ஆனால்...
நட்பெனும் பெருமழையில்
நனைந்து கொண்டிருந்தோம்....

உதடு தாண்டிய
வார்த்தைகளுக்குள்
ஒப்பு நோக்கிக்கொண்டோம்
உனக்கும் எனக்குமான
குணங்களையும் நலன்களையும்....

அதே நேரம்
உள்ளத்துக்குள்
குழி தோண்டி
புதைத்து வைத்திருந்தோம்..
உனக்கும் எனக்குமான
சுயங்களையும் முரண்களையும்....

பெருமழையின் பின்
நனைந்து கனிந்த
நிலம் போல
சில நாட்கள்,வாரங்கள்
இனித்து கிடந்தது
நம் நட்பு...

வெயில் காய காய
பாளம் விடும் பூமியாய்..
நாட்கள் செல்ல செல்ல
வெளிப்பட்டன
நீயும் நானும்
நமக்குள் புதைத்திருந்த
சுயங்கள் கொண்ட
முரண்கள்......

உனதும் எனதுமாய்..
இருவரின் சுயங்களும்
உரசும் நேரத்தில்
வெளிப்படும்
பொறிகளின் வெப்பத்தில்
குளிர் காய
காத்துக்கிடக்கின்றன
பிரிவின் வலிகள்........

நட்பெனும் பெருமழையில்
நனைந்தவாறே
இருப்பதால்
இதுவரை
முரண்களின் உரசல்கள்
உணரப்படவில்லை......

என்றாலும்...
வா.....
உள்ளத்துப் புதையலை
உதடுகள் தாண்டவிட்டு...
இட்டு நிரப்புவோம்...
நமக்குள்ளான
சுயங்கள் கொண்ட
முரண்களின் இடைவெளியை.....

சித்திரைப் பெருநாளாம்...

சித்திரைப் பெருநாளாம்...
சீர்மிகு திருநாளாம்...
இத்தரைத் தமிழர்க்கெல்லாம்
ஏற்றமிகு ஒருநாளாம்...

பொங்குக இன்பெமெல்லாம்
தணலிட்ட பாலாய்
தங்கட்டும் இன்பமெல்லாம்
மழலையின் சிரிப்பாய்...

விரோதி மாறி விகிர்தியாகி
விருப்பங்கள் யாவும்
இனிதே நிறைவேறி...
மங்கட்டும் துன்பமெல்லாம்
வெயில் கண்ட பனியாய்....

முக்கனிகளோடு
முத்தமிழும் சேர்த்து
இனிய வார்த்தைகளை
முக நகையோடு கோர்த்து...
வாழ்த்தி வரவேற்போம்....
வரவேற்று வாழ்ந்திடுவோம்...

இரவில் மழை இன்னும் அழகு....

மழை பெய்து..
மண் இளகி..
மரங்கள் கூட
மௌனங்களோடு
மகிழ்ந்திருந்த
குளிர்ந்த இரவு....

மின்மினிப் பூச்சிகள்
விளக்கணைத்து தூங்கின...
சில்வண்டுகளின் ரீங்காரம் கூட
சிறிதேனும் கேக்கவில்லை....
தூரத்து குட்டையில்...
துணை தேடும்
தவளைகளின் சத்தம் மட்டுமே..
இரவின் தனிமைக்கு துணையாய்....

மழை ஈரம் சுமந்த
காற்றின் விசாரிப்பில்...
மணம் மறந்து குவிந்திருந்தன
செடியில் பூக்கள்....
நட்சத்திரங்களின்
கண்சிமிட்டல் விசாரிப்பில்
நாணத்தோடு அலைந்திருந்தன
நீர்மேகங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்...

நிலத்தில் கால் வைக்க
உச்சிக்கு ஏறியது..
மழை நீரின் குளிர்...
புதிதாய்க் குழந்தை பெற்ற
தாய் போல
பூரித்துக் கிடந்தது பூமி...

மழை அழகு...
இரவில் மழை இன்னும் அழகு....
மழை பெய்த இரவு.....
மிக மிக அழகு....

மனதின் வலிகள்....

மௌனங்களால்
நிறைந்திருக்கிறது
மனதின் வலிகள்....

தனிமை எனும்
நீர்க்குளத்தில்
தனித்தே
தவமிருக்கிறது
ஆழ் மன விசாரங்கள்....

ஆறிப்போன தழும்பை
தேடிப்பிடித்து
கீறிப்பார்க்கும்
சுயவிரக்கங்கள்....

ஆனந்தமாய் வந்த
காற்றுகூட முகப்பூவின்
வறண்ட புன்னகை கண்டு
வாடிப்போகிறது....

இரவில் விளக்கணைத்து
இருட்டோடு ஒப்பாரி வைத்தே
கழிகிறது நேரங்கள்
கவனிப்பார் யாருமின்றி....

உணவையும் உறக்கத்தையும்
ஒரு சேர ஒதுக்கிவைத்து
பசிக்கு துக்கத்தையே
பரிமாறிக்கொண்டிருக்கிறது.....

விழிகளில் விதைத்திருந்த
காட்சிகளின் விதைகள்
கண்ணீர்ப்பூக்களையே
கணக்கின்றி விளைவிக்கின்றன....

நெருப்புக்கோழியாய்
மண்ணுக்குள் முகம்
புதைத்துக்கொள்ளவே
தவிக்கிறது மனது....

சுற்றம் தவிர்த்து
சோகங்களுக்குள் சுருண்டு
கொள்கிறது
நத்தையாய்.....

கவலைகளோடு
கவனிக்கிறது அறிவு...
காலம் மாற்றும் என்ற
நம்பிக்கையோடு.....

உலகம் ஓர்நாள் உன்வசப்படும்....

துன்புற்றோருக்கு உதவ
ஓடு
இறக்கம் கண்ட
நீராய்.....

வைதோரையும் வாழ்த்திப்
போ
வாசம் கொண்ட
காற்றாய்....

எல்லோருடனும் இனிதே
பழகு
பரந்து கிடக்கும்
வானாய்.....

தப்பைக் கண்டால்
பொங்கியெழு
வேகம் கொண்ட
தீயாய்.....

துயரம் கொண்டாலும்
பொறுமையாயிரு
நம்மைச் சுமக்கும்
நிலமாய்....

அனைத்திற்கும் மேலாய்....

கல்லெறிவோரையும்
சிறு புன்னைகையால்
தண்டித்து விடு....

உலகம் ஓர்நாள் உன்வசப்படும்.....

நீங்களும் இந்நாட்டு மன்னர் தானே???

அரசியல்......

அடித்தட்டு மக்களுக்கு
தொண்டராவதே புண்ணியம்

கொஞ்சம் வசதியிருப்பவனுக்கு
வெட்டி வேலை...

அறிவுஜீவிகளின் பார்வையில்
சாக்கடை...

அப்பாவிகளின் பார்வையில்
புரியாத புதிர்...

அரசியலில் இருப்போர்க்கு
கௌரவத்தின் மைதானம்

அரசுத்துறையினருக்கு
அளவில்லா அமுத சுரபி

கலைத்துறையினருக்கு
ஓய்வுகால உல்லாச விடுதி..

ஆசிரியர்களின் பார்வையில்
தீண்டாத பெருங்குற்றம்...

மாணவரின் பார்வையில்...
தொலை தூர தின்பண்டம்...

அப்படியாயின் அரசியல்
எங்கு அரசியலாக இருக்கும்.....

வாக்காளர்கள் எங்கு
விழிப்போடு இருக்கிறார்களோ

சாதி மத உணர்வுகள்
எங்கு சவப்பெட்டியில் இருக்கிறதோ....

நம்பிக்கை எங்கு
நடமாடுகிறதோ...

சுயநலம் எங்கு
தூக்கிடப்படுகிறதோ...

அங்கே அங்கே தான்
அரசியல் அரசியலாய் இருக்கும்...

வீசத்துக்கு மூன்று வாக்கு என
வீதியில் எறிந்துவிட்டு..

வேலைக்கு ஒருநாள் விடுமுறை
என்றிருந்து கொண்டு...

உங்களின் தவறுகளுக்கு
அரசியலை பழிக்காதீர்...

வழி மறிக்கும் கல்லை
அரசுதான் அகற்ற வேண்டும் என்றில்லை

நாமும் அகற்றலாம்...
நாட்டின் நலம் போற்றலாம்....

நிலம் சேரும் நீரின்
நிறம் போலவே

சேரும் இடத்திற்க்கேட்ப
சேரும் நிலைக்கேற்ப
அரசியல் புனிதமடைவதும்
புனிதம் கெடுவதும்.....

நீங்களும் இந்நாட்டு
மன்னர் தானே???

உங்கள் கை சுத்தம் தானே.....
உங்கள் உள்ளம் வெள்ளைதானே...
உங்கள் உணர்வுகள் உண்மைதானே...
உங்கள் திறம் உறுதிதானே...

வாருங்களேன் முயன்றுபார்ப்போம்
இயன்றவரை திருத்திப்பார்ப்போம்
திருந்தும் வரை வருந்திப்பார்ப்போம்
வெல்லும்வரை இணைந்திருப்போம்...

காடுகளின் சுயசரிதம்......

முன்னொரு காலத்தில்
இந்த பூமியின் நிலமெல்லாம்
நான் வேரோடியிருந்தேன்....
உயிர்கள் ஒவ்வொன்றாய்
உருவாகிக்கொண்டிருந்தன
என்னுள்.....

உருவாகும் ஒவ்வொரு
உயிர்களுக்கும் நான் மட்டுமே
ஆதாரமாயிருந்தேன்....

எல்லாம் இனிதாய்த்தான் இருந்தன
மனிதன் என்னும் உயிர்
என்னுள் உருவாகும்வரை....

நான்கு காலில் நடந்திருந்தவன்
இரண்டு காலில் நிற்க்கத்தொடங்கிய போது
ஆரம்பித்தன எனக்கான
அழிவின் அறிகுறிகள்....

தொட்டிலில் இருந்து
கட்டில் வரையில்
தேவைப்பட்டேன் விதம் விதமாய்
நாகரீக பாதையில் அவன்
நடமாட நடமாட
என் பரப்பளவுகள்
குறையத்தொடங்கின....

கடவுள் தந்த ஆறாம் அறிவு
எனும் அபாயத்தை
அன்று முதல் உணர ஆரம்பித்தேன்....

சென்ற நூற்றாண்டுவரை
பாதியாய் இருந்த என்னை
விஞ்ஞானத்தின் துணையோடு...
இருந்த அறிகுறிகளே
இல்லாமல் செய்து விட்டான்....

என்னைமட்டுமே அறிந்த உயிர்கள்
அழிந்து போயின...
தப்பிப் பிழைத்தவை
மிருககாட்சி சாலையில்
வாழ வகையின்றி
வாடிக்கொண்டிருக்கின்றன.....

என் பரப்பளவை சுருக்கியவன்
என் அங்கங்களையும் சுருக்கிவிட்டன
போன்சாய் மரங்களாய்
பூரித்து கிடக்கிரேணாம்
அவன் வீட்டு அலங்கார தொட்டியில்..

உணவிலிருந்து
உயிர் பிரிந்தபின்னால் செல்லும்
பாடை வரை தந்தேன்....
தாயின் பாசத்தோடு.....
அவனோ
நாகரீக காதலி கேட்டாள் என்று
என் அங்கங்கள் வாங்கிப்போனான்...
இன்றோ மீந்திருக்கும்
என் இதயமும் கேட்கிறான்....

கொடுக்க மறுத்தாலும்
பிடுங்கிப் போவான்....
எனவே தடுக்க நினைக்கவில்லை.....

ஆனால் என்ன
இதயம் தொடுமுன்னே
இடறி வீழ்கிறான்
தாங்கிப்பிடிக்க நினைத்தாலும்
இயலவில்லை....ஏனெனில்
அவன் காதலி அணிந்திருப்பது
என் அங்கங்கள் ஆயிற்றே....

என் அடையாளங்களில் மீந்திருக்கும்
இறுதி மரத்தினைக்கொண்டு
தயாரித்த காகிதத்தில்
நாளை முழக்கமிடுவான்
மரங்களை வளர்ப்போம் என்று....

காகித உருவில்
நான் கண்ணீர் சிந்துவேன்
மகனே என் மகனே
உன் வாழ்வு சிறக்க
என் வாழ்வை ஈந்தேன்
உன் வாழ்வு சிறக்கவில்லை
என் தியாகம் வீண் என்று....

நட்பு...

விரும்பினாலும்
விலகியிருப்பேன்
என்றது உறவு....
வெறுத்தாலும்
விரும்பியிருப்பேன்
என்றது நட்பு....

எடுக்கத்தெரிந்த
உறவுகளும்
கொடுக்கமட்டுமே தெரிந்த
நட்புகளுமாய்...
அனைவரது வாழ்விலும்
அவஸ்தைப்படுத்துகிறது உறவு..
அரவணைக்கிறது நட்பு...

நட்பாகும் உறவுகளில்லை
உறவாகும் நட்புகளுண்டு..
உறவினைத்தேர்ந்தேடுக்கும்
உரிமை நமக்கில்லை...
நட்பை தேர்ந்தெடுக்க
திறமை இன்னும் போதவில்லை...
ஏனெனில்
உறவு விதிப்பயன்
நட்பு மதியின் பயன்...

எத்தனை கட்சிகள்???

இந்திய தேசத்தில் தான்
எத்தனை கட்சிகள்???
நடக்கத் திராணியற்ற
நாற்காலிகளின் கட்சி ஓன்று
எதிர்காலம் தெரியாத
இறந்தகால கட்சி ஓன்று...
வரலாறு மறந்துவிட்ட
வர்க்கபேத கட்சி ஓன்று..

தலைவர்களால் நிறைந்துவிட்ட
தொண்டரில்லா கட்சி ஓன்று..
தொண்டர்களோடு தொடர்பில்லா
தலைவர்களின் கட்சி ஓன்று..
கட்சியே குடும்பமாக
குடும்பமே கட்சியாக
பரிணமித்துவிட்ட கட்சி ஓன்று..

ஓட்டுக்கேட்டு வரும்போது
ஒருகட்சி...
வாக்குவாங்கி வாழ்த்துரைக்கும்போது
ஒரு கட்சி...
பெட்டிகள் நிறைந்த ஜ(ப)னநாயகத்தில்
கொள்கைகளெல்லாம் குப்பையில்...

எதிர்கால இந்தியாவின்
இணையற்ற தூண்களுக்கு
என்ன செய்வதென்று
குளுகுளு அறையில்
கூடி விவாதிக்கின்றன
செல்லரித்த தூண்கள்...

இத்தனை ஆண்டு காலமாய்
மாறி மாறி தேடுகிறார்கள்
இரவில் பெற்ற அடிப்படை சுதந்திரம்
எங்கே என்று

பாவம் இன்று வரை தெரியவில்லை
அரசியல் கட்சிகளின்
கொள்கைகளோடு அதுவும்
அஸ்திவாரத்துக்கடியில்
புதைக்கப்பட்டிருக்கிறது என்று....

என்ன செய்ய நானும்
அரசியல் கட்சியொன்றின்
அடிப்படை உறுப்பினர்தானே...

எனவே நானும் தேடுகிறேன்
எனக்கான அடிப்படை உரிமைகளை...
இவர்கள் இருக்கும்வரை...
கிடைக்கப்போவதே இல்லை
என்று தெரிந்தும் கூட....

தோழமைக்கு நன்றி.....

தோழமைக்கு நன்றி.....

திடீர் நன்றியில்
திகைக்க வேண்டாம்...

நன்றிகள் நவில்வது நட்பில் இல்லை
என்றாலும்
நவிலாவிடில்
நட்பே இல்லை என்பதால்
இங்கு உரைக்கிறேன் இத்தனை நன்றி....

படுகுழியின் பசிக்கு
இரையாக இருந்தவனை
பாதை மாற்றி பயணிக்க வைத்தீர்...

கடமைப்பட்டிருப்பதால்
இங்கு நன்றி உரைக்கிறேன்

கர்வத்தையே கவசமாக்கி
என்னை காத்து வந்தேன்..
ஆயினும்
கவசம் தகர்த்த அம்புகள்
சில துளைத்து
வலிகள் தந்தன வடுக்களோடு....

வானரங்கள் நிறைந்த வனத்தில்
வாரணமாய் நீ மட்டுமா ?
என்ற வக்கரிப்புக் கேள்விகளால்
வாய் மூடி கிடந்தேன்...

உங்களால்
வானரங்கள் மட்டுமே வனமல்ல
என்றுணர்ந்தேன்....

இன்றோ...
ஆசை வலையில் அகப்படவில்லை
காதல் களத்தில் வீழவுமில்லை
மோகத்தீயில் வேகவுமில்லை
சோகப்பாயில் சுருளவுமில்லை

எண்ணங்கள் கொண்டு ஏங்கவுமில்லை..
வண்ணங்கள் கண்டு மயங்கவுமில்லை..
எண்ணித் துணிக கருமமென்றே
திண்ணம் கொண்டு தீர்மானித்துவிட்டேன்....

வழிகாட்டியாய்
வந்தமைந்த தோழமைக்கு நன்றி...
என் புலனுணர்த்திய போதனைக்கு நன்றி...
புறம் சிறக்கச் செய்த புரிதலுக்கு நன்றி...

அனைத்துக்குமேலாய்
துணையாய் இருக்கும் தோழமைக்கு நன்றி....

எரியட்டும் உணர்வுத்தீ.......

உணர்வுகளில் கனலேற்றி
உள்ளத்தில் ஊதிவிட்டு
விழிகள் திறந்து பார்....

உன் பார்வையின் வெப்பம்
படரட்டும் உலகெங்கும்.....

இதயத்தை பூட்டிவைத்து
இரக்கத்தை சாம்பலாக்கிய
இயந்திரங்கள் எரிந்துபோகட்டும்......

மரணத்தின் வாயிலில்
மனிதத்தை தள்ளிய
மகான்கள் மாண்டு போகட்டும்.......

நிலமெல்லாம் சிவப்பாக்கி
நீரெல்லாம் விஷமாக்கி
நினைவுகள் கருகச் செய்த
நீசர்கள் நீங்கட்டும்...

இழந்த உயிர்களுக்கு
இழப்பீடு வேண்டாம்......

இருக்கும் உயிர்களுக்கு
காப்பீடாகவாவது....
எரியட்டும் உணர்வுத்தீ......

உன்னுள்ளும் என்னுள்ளும்
மட்டுமல்ல......

உலகத்தில் உயிரோடு
இருப்பதை உணர்பவர்கள்
எல்லோருக்குள்ளும்....