Friday, August 14, 2015

கண்மலர்ந்து பார்......

விரல்களாய் வருடினேன்....

நீ விண்மீனானாய்....
இதழ்களால் வருடினேன்....
நீ.....
இதயத்தின் துடிப்பானாய்.....
பெண்ணே.....
உன்னை
காதலாய் வருடினேன்....
நீயோ......
கானல் நீரானாய்.........
எண்ணங்களால் வருடி...
எழுத்துக்களாய் பதிவு செய்து....
வண்ணங்களை வடிக்கவே....
நினைத்திருந்தேன்.....
நீயோ......
புன்னகையாய்
புலம்பெயர்ந்து....
புலமபல்களாய்
வடிவம் கொண்டாய்.....
இன்றோ....
கண்ணீரால் பூஜை செய்து
என காயங்களால்
யாகம் வளர்த்தி...
கவிதைகளால்
அர்ச்சிக்கிறேன்.....
கனவுகளாகவேனும்
கண்மலர்ந்து பார்..

தவறியவனின் உயில்.........

ருவழியில் பிறந்தேன்...
எந்தை கருவிழியில் வளர்ந்தேன்....
இருவிழியில் ஒரு காட்சியாய்
அம்மையப்பரின்
கனவின் வழி
வாழ்வைக் கண்டேன்.....

உறு வழியும்
உதவா வழியுமாய்..
என்னெதிரில் இருக்கக் கண்டு...
தெரிவின் வழி
தீராமால்
தெருவின் வழி திரியக் கண்டேன்....

இதம் தரும் புகையென்றேன்...
சுகம் தரும் மதுவென்றேன்...
நலம் தரும் பொய்களென்றேன்..
ஒழுக்கமது தவறி நின்றேன்...
ஓதுவதும் வீணென்றேன்.....

கனவுகள் இனிமையென்றேன்...
கற்பனையே களிப்பென்றேன்...
அறிவுதரும் மொழி மறந்தேன்...
நல்ல பொருள் நூல் தவிர்த்தேன்....
நல்லோரின் இனம் மறைத்தேன்....

எல்லாம் கடந்து போக...
இன்றோ...
உறையும் வழியின்றி.
தெருவழி திரியும்
திருவில்லா உருவானேன்....

என்னோரே என்னோரே...
எழில் மிகுந்த மண்ணோரே...
இறை தந்த மறையெல்லாம்..
மறை வகுத்த பொறையெல்லாம்
உறையென உறைவோரே....

இன்றோ நாளையோ...
என்னாவி கூடு களையலாம்...
அன்றேனும் உணருங்கள்...
தவறுபவர்களும் திருந்தக்கூடும்....
திருந்தியதால் வருந்தக்கூடும்....

மன்னிப்பே...
மானுடத்துள்....
மறையாமல் உறையும் இறை.....
மன்னிக்காத மனதில்
இல்லை இறை வகுத்த பொறை......

கடந்த காதல்க(ள்).......

அலையலையாய் கிளம்பிய
அவசர நினைவுகளுக்குள்
தொலைந்து போனது
என்னுள் பூத்த நொடிகள்....

கடந்த காலங்களில்
நான் கடந்த காதல்களில்
நெகிழ்ந்த மணித்துளிகள்
புதைந்து கிடக்கின்றன.....

ஐந்தாம் வகுப்பிலிருந்து
ஆரம்பித்த அந்த ஆச்சரியம்
வளர்ந்து கொண்டே இருக்கிறது
தடுப்பணைகள் தாண்டி......

புரியாத பிரியங்களில்
மூழ்கிக் கிடந்த காலங்கள்....
வளர்ச்சிக்குத் தக்கவாறு
மலர்ந்திட்ட தருணங்கள்......

நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் நின்று
கனவுகளாலும் கவிதைகளாலும்
தடுமாறிய பருவங்கள்.....

வயதொன்று கூட
வரியொன்று கூடும்
தென்னையாய்........
ஒவ்வொரு காதலின் பின்னும்...
அனுபவங்களைக் கூட்டிக்கொண்டு...

எல்லோரையும் போலவே...
எனக்கும் காதலினால்..
வசந்தங்களும் உண்டு
வருத்தங்களும் உண்டு...

வசந்தங்களுக்குப் புன்னகைத்து..
வருத்தங்களுக்கு அழுதோய்ந்து
இயல்புக்கு திரும்பும்போதெல்லாம்
எட்டிப்பார்க்கும் இன்னோர் காதல்.....

ஒவ்வொரு முறை மலரும்போதும்
இந்தச் செடியில்
இதுவே கடைசி மலர்
என்றே கருதுகிறேன்.....

உதிர்ந்தபின் உதிக்கும்
இன்னொரு மலர்
புன்னகையோடு புறந்தள்ளுகிறது
என் கருத்துக்களை......

இன்னும் மலரலாம்
ஏராளமான பூக்கள்....
என் இதயப்பூஜைக்கென...
ஆயினும்....

நானே காதலிக்காத என்னை
வலிக்க வலிக்க
காதலித்த பூக்கள்
இன்றெங்கோ வாசம் பரப்பியபடி.....

கடந்தே போகத்தான்
காத்திருக்கிறேன்....
நான் கடந்த காதல்களையும்
எனைக் கடந்த காதல்களையும்........