Wednesday, April 27, 2011

பரவாயில்லை போ....

வழியினில் வந்தவள்தான் நீ
என் வாழ்வின்
பாதியாகிப்போனாய்...
இன்றோ...
என் வாழ்வைப் பாதியாக்கிப்
போகிறாய்....
பரவாயில்லை போ.....

காதல்
உன்னையும் என்னையும்
சுற்றி லட்சுமணரேகையிட்டது...
விதி...
நம் இன்பங்களை மட்டும்
சிறையிலெடுத்தது......
நீயோ மீதமிருப்பதை
சிதையிலிடுகிறேன் என்கிறாய்...
பரவாயில்லை போ....

இரவாகிப்போன
என் வானெங்கும்
ஆங்காங்கே..
அவ்வப்போது
சில நட்சத்திரங்கள் மின்னினாலும்
நீ மட்டுமே
ஒற்றையாய் ஓளிர்ந்திருந்த
பௌர்ணமியானாய்...

பௌர்ணமிக்குப் பின்னால்
அமாவாசை வருமென
தெரிந்திருந்தும்
அது பற்றி யோசிக்க
மறந்திருந்தேன்....
வளர்பிறையாய் வந்த நீ
தேய்பிறையாகவும்
நினைவுபடுத்திப் போகிறாய்.....
பரவாயில்லை போ...

உன்னால் உயிர்த்தெழுப்பப்பட்ட
என் காதலும் கனவும்
உதிர்ந்து போகலாம்
என்ன செய்ய
ஒரு பயனும் இல்லாமல்
உதிர்வதற்காகவே
மலர்ந்த மலர்களில் ஒன்றாய்
என் காதலும் கரைந்தே போகட்டும்......
பரவாயில்லை போ.....

நிஜங்களைத் துரத்திவிட்டு
நிழல்களைக் கைக்கொண்டு
வாழ நினைக்கிறாய் நீ...
உனக்குப் புரியுமா...??
என்றாவதொருநாள்
நிழல்கள் கலைந்து
நிஜங்களைத் தேடும்போது
அது கிடைக்கவே கிடைக்காது
என்பது.....

விருப்பத்தோடே
விலகுகிறாய் எனில்
ஒன்று மட்டும் தந்துவிட்டுப் போ...
எனக்காக என்னிடமிருந்து
நீ பெற்ற சில
வாக்குறுதிகளை
மட்டுமாவது.......
அவையாவது என்னோடிருக்கட்டும்.....
இறுதிவரை.....இணைபிரியாமல்.....

என் நட்பெனும் பரப்பு....

நீண்டு கிடக்கும்
மாலைப் பொழுதின்
நிழல் போல
மனமெங்கும்...
விரிந்து கிடக்கிறது
என் நட்பின் பரப்பு.....

அதில் விளைந்திருகும்
என் நட்புக்கள்
என்னோடு முரண்பட்ட
காலங்கள் அனைத்தும்
உதிர்ந்து கிடக்கின்றன
காய்ந்த சருகுகளாய்....

சிரிப்பு மழையில்
நனைந்து கொண்டும்
விவாத வெயிலில்
காய்ந்து கொண்டும்
ஒவ்வொரும் மரங்களும்
பசுமை பூத்தே நிற்கின்றன.......

அன்பெனும் தேவதை
அவ்வப்போது
ஆசி புரிந்து போனாலும்
வம்பெனும் சாத்தான்
வந்து போகிறான்
என் வார்த்தைகளின் வடிவில்...

முகம் பார்க்காத
என் நட்புமரங்கள்
அச்சமயங்களில்
நவக்கிரகங்களாய்
திரும்பிக் கொள்கின்றன
என்னுடன்.....

நல்லவனைத் தேடிய
துரியனாய்..
கெட்டவனைத் தேடிய
தர்மனாய்
நானும் என் நட்பை
தேடிக் கொண்டேயிருக்கிறேன்...

சிறகுகள் சுமையென
பறவைகள் சொல்லுமோ...
உதிர்ந்த இலைகளையும்
உரமாக்கிக் கொள்ளும்
என் நட்புமரங்கள்
கிளைகள் சுமையென சொல்லின...

ஒவ்வொரு கிளையாய்
உதிர்த்து உதிர்த்து...
ஒற்றை உடலும்
காற்றில் பறக்க....
கலைந்து போயின
என் நட்பின் தோட்டம்......

உதிர்த்த கிளைகளும்
மிச்சமிருக்கும் வேர்களுமாய்..
பிளந்து கிடக்கிறது
என் நட்பெனும் பரப்பு....
என் வார்த்தைச் சாத்தான்
வாய்ப்பிழந்து போனான்

அப்பொழுதும்...
அன்பெனும் தேவதை
ஆசிர்வதித்துப் போனது.....
என் நட்புப் பரப்பையும்
அதில் அமிழ்ந்து கிடக்கும்
வேர்களையும் கிளைகளையும்.........