Wednesday, November 16, 2011

உள்ள வயலினிலே......

உள்ள வயலினிலே
உணர்வு ஏரோட்டி
கனவுச் செடி நட்டு
கற்பனை நீர் பாய்ச்சி
துளிர்க்கும் காலத்திற்காய்
ஆவலோடு காத்திருந்தேன்

மெல்ல துளிர்த்ததடி
மேனியெங்கும் சிலிர்த்ததடி
அரும்புகள் மலரும்போது
ஆசைகள் பெருகுதடி
அதிசயம் பாரென்று மனம்
ஆராவரம் செய்யுதடி

மெல்லக் களித்திருந்தேன்
மெதுவாக தவித்திருந்தேன்
மலரும் மொட்டைக்கான
மௌனமாய் தவமிருந்தேன்
மொட்டும் மலர்ந்ததடி
முகம் பார்த்து சிரித்ததடி

மலர்ந்த ரோஜாக்கள்
மணம் பரப்பி அழைத்ததடி
பறித்தால் வலிக்குமென்று
பார்வையோடு விடுத்திருந்தேன்
வண்ணங்கள் சிறந்திருக்க என்
எண்ணங்கள் தாரைவார்த்தேன்

முட்கள் குத்துதென்று
ரோஜா முனகியது
பறித்தால் வாடுமென
மனமோ தயங்கியது
உதிர்ந்ததடி ரோஜா
உறவான செடி நீங்கி...

முட்கள் குத்தியது
ரோஜாவிற்கு பிடிக்கவில்லை
முட்களை நீங்கி வாழ
செடிக்கும் விருப்பமில்லை
ரோஜா மாலையானது
செடியும் மொட்டு விட்டது

கண்ணின் இமை போல
காரிருள் நிலவு போல
தாய்க்கு தலைச்சன் போல
எண்ணி வளர்த்த நானோ
ஏங்கி தவித்திருந்தேன்
தவித்து தனித்திருந்தேன்.............

நீ.....

ஆதி நீ
அந்தம் நீ
அடக்க முடியா
ஜோதி நீ

வேதம் நீ
விதியும் நீ
விண்ணை வெல்லும்
மதியும் நீ

ஞானம் நீ
யோகம் நீ
ஞாலம் கடந்த
காலம் நீ

ஊனும் நீ
உயிரும் நீ
இடையில் இயங்கும்
உணர்வும் நீ

கனவும் நீ
நினைவும் நீ
கண்ணில் விரியும்
காட்சி நீ

இரவும் நீ
பகலும் நீ
இடைவெளி இல்லா
பருவம் நீ

கர்வம் நீ
கடமை நீ
என் காதல் தேடிய
காதலி நீ

அன்பும் நீ
பண்பும் நீ
வாழ்விற்கான
அர்த்தம் நீ

வானும் நீ
மண்ணும் நீ
இடையில் உலவும்
வளியும் நீ

இன்பம் நீ
இனிமை நீ
எனக்காய் பிறந்த
யாவும் நீ.......

உன்னை காயப்படுத்தாத என் காதலை.........

நேசித்த பொழுதுகளைப்பற்றி
நான் யோசித்ததே இல்லை
ஆயினும்....
யாசித்த சிலது பற்றி
வாதித்ததைப் பற்றி யோசித்ததுண்டு....

அளவு மீறிய
அன்புதானெனினும்...
வரப்பு மீறிய வெள்ளமாய்
அவ்வப்போது
அத்து மீறியதுண்டு....

அடிப்படை உரிமைகளில்
கூட நான் நுழைகிறேன்..
தவறுதான் என்றாலும்
தவிர்க்க முடியவில்லை....

உண்ணாயா உறங்கினாயா
என்பதோடு நிறுத்தியிருக்க
வேண்டும்தான்....
ஆனாலும்...அதனைத்தாண்டியும்
உன் சுயகௌரவங்களில்
தலையிட்டிருக்கிறேன்......

சுயவிருப்பங்களின் பேரில்
நீ சுடர் தீண்டப் போகும்போது
சுடும் என சொல்லி
தடுத்திருக்கிறேன்....
தவிர்த்திருக்க வேண்டும்தான்....
ஆனாலும் இயலவில்லை.....

எதிர்பார்ப்புகள் அதிகம்தான்
என்ன செய்ய
அவ்வப்போது அறிவு சுட்டினாலும்
உன்னைத்தவிர வேறு
யாரிடம் எதிர்பார்க்க
என்றே சமாதானப்படுத்திக் கொண்டேன்...

புரியாத அல்லது
புரிய விரும்பாத எனக்காக
பாவம் நீயும்தான்
உன் விருப்பங்களை
விலக்கி வைத்து.....
எத்தனை முறைதான் தவிப்பாய்...

சுகங்களை சுருக்கி வைத்து
சோகங்களை பெருக்கி வைத்து
என் அக்கறை
உனக்குத்தான் எத்தனை
அகக் குறைகளை
அளித்திருக்கிறது....

ஆனாலும் நீ...
அமைதியாகத்தான் இருக்கிறாய்...
ஆழ்கடல் கொண்ட நீராய்
உன் காதல் ஆர்ப்பாட்டமில்லாமல்....
கரையோர அலையாய்
என் காதல்..
ஓரிடத்தில் நில்லாமல்....

இப்போதும்
புரிகிறதா என்றால்
தெரியவில்லை பெண்ணே....
அறிவு காதலின் கரையில்
அவகாசமெடுத்து கட்டிய மணல்வீட்டை...
அவசரமாய் கிளம்பி வரும்
என் அக்கறை அலைகள்
அழிக்கவே துடிக்கின்றன.....


யாசித்துக் கொள்கிறேன்
எனக்கு நானே....
அளவு மீறிய அன்பை...
இம்சிக்காத அக்கறையை...
உன்னை காயப்படுத்தாத
என் காதலை....

எதிர்பார்ப்புகளோடு.............

உன் நினைவுகள்....
அணை கடந்த நதி நீராய்....
நீர் வசிக்கும் சிறு மீனாய்...
மீன் ருசிக்கும் பசும் பாசியாய்...
என் மனதின் இரு கரை நெடுக
நிறைந்திருக்கின்றன.....

என் கனவுகள்...
நாம் கடக்கும் சாலையாய்
சாலையிடையே வரும் சோலையாய்...
சோலை கொண்ட சுவைகனியாய்..
என் வாழ்வின் நீளமெங்கும்
காத்திருக்கின்றன....

என் ஆசைகள்...
இதம் தரும் மாலையாய்...
மாலை வரும் நிலவொளியாய்..
நிலவொளியில் மலரும் அல்லியாய்....
என் இளமையின் தேகமெங்கும்
மணந்திருக்கின்றன.....

என் ஏக்கங்கள்.....
எல்லையில்லா பாலையாய்...
பாலை கொண்ட கோடையாய்...
கோடை தரும் தாகமாய்...
என் நாட்களின் நகர்வுகளில்...
வழிந்திருக்கின்றன....

என் தாபங்கள்.....
இதழ் விரித்த மலராய்...
மலர் கொண்ட தேனாய்...
தேன் சுவைக்கும் வண்டாய்....
என் காதலெங்கும் மௌனங்களாய்..
விரிந்து கிடக்கின்றன....

இன்னும்....
ஒவ்வொரு உணர்வுகளும்
இயற்கையோடியைந்தே..
இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன்...
ஒரு நாள் உன்னில் உய்யலாமென்ற...
எதிர்பார்ப்புகளோடு..............

என்னைத் தொலைத்த நான்..

கண்ணாரப் பார்த்து..
காதாறப் பேசி...
கைகோர்த்து நடந்து
நாம் காதலிக்கவில்லை....

வருகைக்காக காத்திருந்து..
வந்த பின ஊடல் கொண்டு..
நடைபாதைப் பூங்காக்களில்
நாம் மகிழ்ச்சி விதை தூவவில்லை....

உனக்காக அலைந்திருந்து..
உனக்காக தேர்வு செய்து..
உனக்காக ஒரு பரிசை
நான் ஒரு பொழுதும் தந்ததில்லை...

உன்னுடைய நலனைத் தவிர..
உனக்கான மதிப்பைத் தவிர...
நமக்கான காதலில்
வேறெதுவும் நாடவில்லை....

நானுனக்கு ஒரு சில
உதவாக் கவிதைகளும்
சில பல கண்ணீர்த்துளிகளையுமே
கையளித்திருக்கிறேன்....

இன்றோ.....
தாய்க்கு ஏங்கும் பிள்ளையாய்
அலைமோதிக் கொண்டிருக்கிறேன்...
அனல் மீது நின்று கொண்டிருக்கிறேன்...

தொடுக்கப்பட்ட
என் கேள்விகளுக்கு
புறக்கணிப்பையே பதிலாக்கி
போய்க்கொண்டிருக்கிறாய்...

இன்னும் சில கவிதைகளும்
ஏராளமான கண்ணீர்த்துளிகளும்
உன்னிடம் ஒப்படைக்கவே
என் கணக்கில் இருக்கின்றன

என்ன செய்ய....???
கண்ணீர்த்துளிகளாலேயே
கடந்த காலங்களை கழுவிப் பார்த்தும்
விடை தெரியவில்லையே..???

ஆசைப்பட்ட பொம்மையைத்
தொலைத்த் குழந்தையாய்..
என்னைத் தொலைத்த நான்..
கண்ணீரோடும் அதில் நிறைந்த காதலோடும்......

உன் நினைவுகள் போதுமடி............

மண்கோட்டை எனத்தெரிந்தும்
மலையளவு கட்டி வைத்தேன்
உயிர்க்கோட்டை கருகக்கருக
உணர்வுத்தீ எரிய வைத்தேன்....

பலிக்காத கனவென்று-புத்தி
பழித்தே கூறினாலும்
புத்தியைப் புறந்தள்ளி
புதுக்கனவு நான் கண்டேன்.....

இரவு பகல் விழித்திருந்தேன்
பசி தூக்கம் தொலைத்திருந்தேன்..
கண்ட கனவு நனவாக
கடும் முயற்சி நான் கொண்டேன்....

உள்ளமதில் கள்ளமில்லா
உணர்வுகளில் பொய்யுமில்லா
உன்னோடு நான் வாழ
உயிர் வரை ஆசை வைத்தேன்...

கொண்ட நிலை தவறாமல்
கொள்கை குணம் மீறாமல்
எள்ளழவும் பிறழாமல்
உன்னைக் காதலித்தேன்......

உன் நிலை தனையறிந்தே-இன்று
உயிர் வதை தாங்கி நின்றேன்
என் நிலை தனையெண்ணி
ஏங்காதே கண்மணியே....

உயிர் கொண்ட காதலுக்கு
உடலங்கள் தேவையில்லை
உணர்வால் வாழ்ந்திருந்தும்
ஒழுக்கமதை மீறவில்லை....

கண்ணே கலங்காதே
யாவும் கடந்து போகும்
பெண்ணே வருந்தாதே
வலியெல்லாம் ஒரு நாள் தீரும்.....

புது வாழ்வு நீ தொடங்கி
புதுக்கனவு நீ கண்டுணர்ந்து
இன்பமாய் இல்வாழ்வில்
இணைந்திருக்க வாழ்த்துகின்றேன்...

உன் நினைவுகள் போதுமடி
நான் உயிர் வாழ்ந்திருக்க
என் கனவுகள் போதுமடி
என் காலம் கழிந்திருக்க...

உன் நலம் போதுமடி
என் நலம் சிறந்திருக்க
உன் சிரிப்பு போதுமடி
என் துக்கம் மறந்திருக்க..

என்னுடைய பிரார்த்தனையில்
உனக்கும் ஒரு இடமுண்டு
என்னுடைய காதலுக்கு
உனக்குமட்டுமே இடமுண்டு.......

என் நட்புப் பூக்கள்.....

மேகங்களில் சூல்கொண்டு
மழையாய் பொழிந்து..
அருவியாய் விழுந்து..
ஆறாய்ப் பெருகி
ஓடி வருகிறது -என்
நட்பெனும் ஆறு....

கண்டங்கள் கடந்த
பந்தங்களோடும்...
தேசங்கள் கடந்த
நேசங்களோடும்..
அதில் மலர்ந்து வருகின்றன-என்
நட்புப் பூக்கள்.....

அன்பொன்றே
இணைக்கும் சங்கிலியாக...
உதட்டளவிலோ...
உயிரளவிலோ...
ஒன்றாய்க் கலந்தே...
உலவிக் கொண்டிருக்கின்றேன்....

அவ்வப்போது தடைகளாகும்
பாறைகளை..
தவிர்த்தோ..பொடித்தோ..
புரண்டோடி வருகிறது
என் நட்பெனும் ஆறு.....

ஐவகை நிலத்திலும்
ஆற்றுப் புனலாய்...
எந்தவொரு வீழ்ச்சியிலும்
தேற்றும் உறவாய்..
உணர்வுகள் யாவிலும்
உறைந்தே கிடக்கின்றன- என்
நட்பெனும் வசந்தங்கள்....

நிறையச் சிரித்து...
மறைவாய் அழுது...
குறையாப் பாசமும்
மறையா அன்புமாய்
என்னோடு
இயைந்தே மகிழ்ந்து
கிடக்கின்றன நான் கொண்ட நட்பூக்கள்....

நேசம் கொண்ட உறவுகளை..
வாசம் மிகுந்த நட்புக்களை...
வாசித்தும் நேசித்தும்
வாழ்ந்து கிடக்கிறேன் நான்
வாசம் வீசும் வனமாய்......

பாரதி..........

பாரதி.....
வார்த்தையில் பொறி வைத்து
வாக்கியத்தில் பற்றவைத்து...
கவியெனும் நெருப்பாக்கி...
சுதந்திர வேட்கைக்கு...
சூரியனாய் சுடர்விட்டான்.....

முண்டாசும் முரட்டுமீசையும்
கோப விழிப்பார்வையும்
தனிப்பட்ட அடையாளங்களாய்
அன்றிலிருந்து பதிந்தே போயின...

ஏகாபத்தியம் என்னும்
மூடுபனியின் கீழ்
அனைவரும் புல் நுனிகளாய்
கிடந்தபோது...
பகலவனாய் எரிந்தான் பாரதி....

கவிக்கதிர்கள் ஊடுருவியபோது
மூடுபனிக்கும் வியர்த்தது...
முடங்கிக் கிடந்த
புல் நுனியும் விழித்தது....

இன்று அறிவியல் சாதிப்பதை
அன்றே கவிதைகளில்
போதித்தவன் பாரதி...
கட்டுரைகள் தீட்டியே
பிரிட்டிஷாரை பேதித்தவன் பாரதி...

எட்டயபுரத்தின்
அக்கினிக் குஞ்சு
எட்டுத்திக்கிலும்
சுடர்விட்டெரிய
சுதந்திர தாகமும்
சூறாவளியானது...

காக்கை குருவிக்கும் உறவான கவி
காலனையும் காலால் உதைத்த கவி
கண்ணனைக் காதலனாய்..
குயிலுக்கும் தோழனாய்...
கடவுளையும் கேள்விகளால்
கலங்க வைத்த கவி...

வறுமைக்கும் பகைக்கும்
இடையில் வாடினாலும்
நிமிர்ந்த நடையிலும்
நேர் கொண்ட பார்வையிலும்
சுதந்தர வானில் சிறகடித்த கவி..
வாழ்ந்தது போதுமென்றோ
உடலழித்துப் போனான்....

ஊனழித்துப் போனாலும்
அனைவருக்கும்
உணர்வளித்துப் போனான்...
கவிகளால் கேட்டுச் சலித்ததால்
கடவுளிடம் நேரிடையாக
கேட்கப் போனான்

வாழ்தல் பெரிதில்லை
மாநிலத்தின் மைந்தர்களே..
ஊனழித்தும் உறவழித்தும்
பேர் நிலைத்து பெருவாழ்வில்
திளைத்திருக்க
மானமும் வீரமுமே
மகத்தான சாட்சியென்று
வழியொன்று காட்டிப் போனான்...

பாரோரே...பாரோரே...
பாரதியின் வழிவாழ
பாய்ந்து வாரீர்...
தோல்வியது நிலையில்லை
துன்பமது இறுதியில்லை
வீழ்வதிலும் வாழக்கற்போம்....
வெற்றியதைப் பெற்றிடுவோம்...
நம்பிக்கை கொள்ளுங்கள்...
பாரதியைப் போல.........

என் நந்தவனப்பூக்கள்..............

அர்த்தமில்லா

வார்த்தைகளுக்குப்

பொருள் தேடியே

தொலைந்து போய்க்

கொண்டிருக்கின்றன

நொடிகளாய் ஆயுள்கள்.....நிலைக்கண்ணாடியின்

பிம்பங்களாய்

நேரெதிராகவே நிகழ்கின்றன

முயற்சிகளால் விளையும்

நம்பிக்கையின்

விருட்சங்கள்.......அழகிருந்தும் மணமில்லா

கனகாம்பரப் பூக்களாகவே..

முகம் மலர்ந்தும்

அகம் மறைத்துக் கிடக்கின்றன

என் நட்பு நந்தவனத்தின்

ஒரு சில பூக்கள்.....தொலை நோக்குப்

பார்வையிகளிடையே

குறை நோக்கும் பார்வைகளால்

குறுகுறுத்து

பின் வாங்கும்

என் நட்புத் தென்றல்.....வாடாமலிருக்க வேண்டும்தான்

அதற்காக என் நந்தவனத்தில்

செயற்கைப் பூக்கள் வேண்டாம்

இயற்கையில் வாசத்தோடு

மணித்துளிகளில் வாடினாலும்

அ(ன்பு)ப்பூக்களே வேண்டும..........என் நந்தவனம்

கணக்கற்ற வாசமில்லா பூக்களால்

நிறைந்திருப்பதை விட

ஒரு சில பூக்களின் வாசங்களால்

நிறைந்திருந்தாலே

போதுமெனக்கு....எண்ணிக்கையளவுகளில்

நம்பிக்கையில்லை எனக்கு

எண்ணங்களினளவில்

நம்பிக்கையெனக்கு....

தலைக்குச் சூடும் பூக்களைவிட

இறைக்குச் சூடும் பூக்களே

போதுமெனக்கு.....ஏனெனில்

என் நந்தவனப்பூக்கள்

ரசிப்பதற்கும் பறிப்பதற்குமல்ல

அவை மதிப்பதற்கும்

துதிப்பதற்குமே.............

உயிர்த்திருக்கிறேன் நான்........

கனவுகளில் கதையெழுதி

கற்பனையில் மேடையிட்டு

நினைவுகளில் நடித்திருந்தேன்

காதலெனும் நாடகத்தை....உணர்வுகளால் உரையெழுதி

உவமைகளால் விமர்சித்து

உதடுகளால் பொய்யுரைத்து

உள்ளமதை மறைத்துக் கொண்டாய்....நிலைதன்னை யோசித்து

நிதர்சனத்தைப் போதித்து

நிஜமிதுதான் என்றே

நீ காட்டிப் போகின்றாய்...விழியின் வழி நீர் கசிய

விரலின் வழி கவி கசிய

உணர்வின் வலியில் உயிர் கசிய

உண்மைதன்னை ஓதுகின்றாய்.....உள்ளமது ஓய்ந்திருக்க

உணர்வுகளும் உறைந்திருக்க

உனக்கான காத்திருப்பில் என்

மெய்யொளியும் மெல்லத் தேய.....கண்ணிழந்த குருடனாய்

அகரமிழந்த தமிழனாய்

பொய்யொளியில் உன்னைத் தேடி

புலம்புகின்றேன் நாளுமிங்கு......என்று வருவாயோ

எனை மீட்டுத் தருவாயோ -அன்றி

மெல்ல விலகி நின்று

சிறுகச் சிறுக கொல்வாயோ....ஏதும் அறிகிலேன் நான்

எதுவும் புரிந்திலேன் நான்

உன்னை மட்டும் உணர்ந்ததனால்

வருவாய் என்னவளாய் என்ற

நம்பிக்கையில்

உயிர்த்திருக்கிறேன் நான்................

பாலையில் பூத்த கள்ளி.............

சுடும் வெயிலிலும்

எதுபற்றியும் பற்றில்லாது

கடும் பாறையாய்க்

கிடந்தவன் நான்....என்மேல் உன் கள்ளமில்லா

காதலைப் பெருமழையாய்

பெய்து பாறையை பொடியாக்கி

மணல்துகளாக்கிவிட்டாய்....அதன் மீதே

என் நட்பு நந்தவனங்களும்

உறவுச் சோலைகளும்

அமைந்து மகிழ்ந்தன..இரவும் பகலும்

உனை நினைத்தே

உருகிய என் உணர்வுகள்

வரிகளாய் வடிவம் கொண்டனஉன் உண்மைஅன்பால்

குளிர்ந்த என் காதல்மேகங்கள்

கவிதை மழைகளைப் பொழிந்து மகிழ்ந்தன

என் நந்தவனமெங்கும்.....இன்றோ அன்பின்றி

வறண்டு கிடக்கின்றன மேகங்கள்

நீரில்லா மேகங்களால்

உன் வரவில்லா என் வனங்களும்.....இன்று மழையில்லா

நிலமாய்க் கிடக்கிறேன்...

கண்டுகொள்ளாமல்

காற்றாய் கடந்து போகிறாய்....சரி போ......

காலம் காயங்களை ஆற்றும்

ஆனாலும் காதலை ஆற்றாது...

இந்த மண் மீண்டும் பாறையாகாது....பதிலாக மழைக்கு ஏங்கியே

பாழாகக் கூடும்....பாலையாகவும் மாறும்...

அன்று எங்காவது ஓரத்தில்

உன் அன்பின் மிச்சங்கள் இருக்கும்.....அதில் முளைத்த

கள்ளிச் செடிகளில்

உன் பெயர் பொறிக்கப்

பட்டிருக்கும்......பாலையில் பூத்த கள்ளி

வறண்டு கிடக்கும்

உன் பெயரை சொல்லி.......

வந்து படித்துப் போ...அன்று நீ கண்ணீர்த்துளிகளை

சிந்தி விடாதே...

பாவம் அந்தக் கள்ளியும்

வறண்டே போகட்டும் விட்டு விடுஏனென்றால்

உன்னை எதிர்பார்த்து

வா(ழ்)டுவதை விட

அது மாண்டே விடட்டும்.........

அப்பாவிற்காய் ஒரு வெண்பா.........

ஒரு துளியில் உயிர் தந்தீர் - என் உடல்

வளர்க்க உழைத்தோய்ந்தீர்...

கருவறையில் நான் வளர -என் தாயை

கண்ணிமையில் தாங்கி நின்றீர்...கால்பதித்த நாள்முதலாய் - என்னை

கண்மணியாய் காத்து வந்தீர்...

நடந்தால் பாதங்கள் நோகுமென்றே - என்னை உம்

தோள்களில் தூக்கிச் சென்றீர்...அகரங்கள் அறிய வைத்தீர்- என் அறிவில்

ஆறாவதைப் பெருக்க வைத்தீர்...

அன்புதனை ஆறாய்ப் பொழிந்தே - என் உள்ளமதில்

பண்புகளைப் பெருக வைத்தீர்..வளர்ந்தாலும் அமுது ஊட்டி - எனைச் சிறு

பிள்ளையாய்ப் பேணி வந்தீர்...

தமிழ்தன்னை அறிய வைத்து -என் கிறுக்கல்களே

இதிகாசங்கள் என்றுரைத்து மகிழ்வித்தீர்...சிங்கக் குட்டியென் றழைத்து - எனைச்

சீராட்டிப் பாராட்டி மகிழ்ந்தீர்..

நோயில் நான் வாட - என் நலனிற்கு

கோவில் கோவிலாய் வேண்டி நின்றீர்...எல்லாம் தந்த அப்பா- என் வாழ்வில்

எல்லாம் ஆன அப்பா....

பொல்லா விதியினால் போனீரே- என் வாழ்வை

வினாக்குறியாய் வளைத்து விட்டு...காலன் அவன் கண்ணிலான் - கண் இருந்தால்

தேன் கூட்டின் ராணியை...

திருடிக் கொண்டு போயிருப்பானா? - தேன் கூடு

சிதைந்தொழுக கோரப்பல் தெரிய சிரிப்பானா??உம்மால் உயிர் பெற்றேன் - உம் அறிவால்

மொழியோடு கவியும் கற்றேன்..

எல்லாம் பெற்று இறுமாந்திருந்திருந்தும் - உம் பிரிவால்

உணர்விழந்து உருக்குலைந்து போய் நின்றேன்..உம் சுவாசம் சுழன்ற வீடு - அது என்

உயிர் உள்ளவரை வாழும் கூடு...

உம் ஸ்பரிசம் பெற்ற ஆடை - அது என்

வாழ்வில் நான் பெறும் வெற்றிகளின் பொன்னாடை..இன்று நீர் எம்மோடில்லை - ஒரு உடலாக..

ஆனாலும் என்னுயிரோடிருக்கிறீர்....

எனக்கான உம்கனவை நிறைவேற்ற - என்றும் உம்

அருள் வேண்டும் அது போதும் எனக்கு.....

என் கனவுகள் விற்பனைக்கல்ல.....

கனவுகள்....

நிறைவேறாத ஆசைகளின்

நிச்சய வெளிப்பாடுகள்...நொடிக்கு நொடி மாறும்

மனித மனதின் ஆழம் காணும்

அற்புத மாயக் கண்ணாடிகள்....விழி திறந்திருந்த போது கண்ட

காட்சிகளின் தாக்கத்தில்

விளையும் பயிர்கள்.....கறுப்பு வெள்ளையே

என்றாலும் அதனை

வெறுப்பார் எவருமில்லை இப்பாரில்....இன்பமோ துன்பமோ

ஏதாவதொன்றின் ஏக்கங்களின்

மிச்ச மீதிகளின் சுவடுகள்...உணமைக்கும் பொய்மைக்கும்

இடையில் ஊசலாடும்

உள்ளத்தின் வெளிப்பாடுகள்....கனவு காணுங்கள் என்று

கலாம் சொன்னார்

நிச்சயம் நிறைவேறும் என்று...பகல் கனவு காணாதே என்று

பாட்டி சொன்னாள்

நிச்சயம் பலிக்காதென்று...இருவரின் கருத்துக்களிலும்

ஏற்பில்லை எனக்கு..

என் கனவுகள் தனிரகம்...நிறைவேறுமா என்ற சந்தேகமோ

நிறைவேறும் என்ற சந்துஷ்டியோ

ஏதுமில்லை என் கனவுகளுக்கு...பகலும் இரவும்..

இடமும் பொருளும்

ஏதும் பாதிப்பதில்லை என் கனவுகளை....கலைஞனின் கனவுகள்

லட்சியப்பாதையில்

கடை விரித்து காசு பார்க்கும்...கன்னியரின் கனவுகளும்

காளைகளின் கனவுகளும்

நித்தமும் எதையோ எதிர்பார்க்கும்...ஆனாலும்...

என் கனவுகள் விற்பனைக்கல்ல...

அவை என் இரவுகளுக்கானவை...இழந்த வாழ்வின்

சுமந்த வலிகளை

மறக்கும் மந்திரங்கள் என் கனவுகள்...உதிர்வது உறுதி என தெரிந்தும்

மலர்கிறதே பூக்கள்..

அது போலவே என் கனவுகளும்...பலிக்காதென்று தெரியும்தான்

ஆயினும் கனவுகளுக்கு

பஞ்சமில்லை என் இரவுகளுக்கு...நினைவுகளில்தான் நிச்சயமில்லை

கனவுகளிலாவது கண்டுகொள்கிறேன்

என் தேவதையின் வருகையினை...மெல்ல தலை கோதி

நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு

மார்பு தடவி தூங்க வைக்கும் என் தேவதைக் கனவுகள்...விழித்துப் பார்க்கும் போது

ஞாபகம் இருப்பதில்லை

ஆகவே என் கனவுகள் விற்பனைக்கல்ல........

எப்படிச் சொல்ல...???

உறைந்த கோப்பைக்குள்

உருகும் ஐஸ்கிரீமாய்..

திடமாயிருக்கும் எனக்குள்

திமிராயிருக்கிறது

உன் காதல்........வளைந்த குளத்தில்

நிறைந்த நீராய்...

திறந்த என் மனதில்

நிறைத்திருக்கிறது

உன் நினைவுகள்.....கனவுகளில் உனைக்கண்டு

களித்துக் கதை பேசி

காலையில் விழிக்கும் போது

கண்களில் புன்னகையோடு என்னெதிரே

உன் நிழற்படங்கள்....இதையெல்லாம் தாண்டி

உண்ணும்போது புரையேறுகையில்

உன்னை யாரோ நினைக்கிறார்கள்

என அம்மா சொல்ல

நினைப்பது நீதான்

என எப்படிச் சொல்ல...???????