Tuesday, March 23, 2010

இழந்தது மனிதம் மட்டும்.....

காக்கை இட்ட எச்சமாய்
கவனிப்பாரற்று கிடக்கிறது மனிதம்....

சிதறி கிடக்கும் பிணக்குவியலில்
உறைந்த ரத்தத்தின்
ஒவ்வொரு துளியிலும்
விரவிக்கிடக்கிறது
பகையின் வீச்சம்...

கடந்து போகும் காற்று கூட
கண்ணீர் விடுகிறது....
மனிதத்தின் நிலையை எண்ணி....

மகரந்தம் சொரியும்
மலர்கள் கூட கந்தகபுகையால்
கருகி கிடக்கின்றன..........

இறந்த உயிர்களின்
திறந்த கண்களூடே
நிறைந்து கிடக்கிறது
எதிர்கால ஏக்கங்கள்....

கடந்த நொடிகளில் நடந்தவை கண்டு
மௌனித்து போன சுற்றுப்புறத்தை
ஊடறுக்கிறது ஓர் ஓலக்குரல்..

இழந்ததும் அடைந்ததுமாய்
எண்ணிப்பார்க்கையில்
அடைந்தது எதுவுமில்லை.....
இழந்தது மனிதம் மட்டும்.....

என் நட்பின் வாசம்....

ஒரு விடுமுறை நாளின்
முன் மாலை பொழுதில்
ஏதோ தேட நேர்ந்த பொது
எதேச்சையாய் தட்டுப்பட்டது
என் மூன்றாம் வகுப்பின்
பாட நூல் ஓன்று.....

தூசு தட்டி
விரித்து பார்த்தேன்...
அடைசல் வாசனைக்குள்ளிருந்து
நலம் விசாரித்தது...
போலியறியாத என் நட்பின் வாசம்....

துவைக்கும் போதெல்லாம்
அம்மா திட்டும் மேல்சட்டை
தேய்ந்து கிழிந்து
தபால் பெட்டியான கால் சட்டை...
காற்றுக்கு இடமில்லாமல்
புத்தகங்களால் நிரப்பப்பட்ட
கனமான புத்தகப்பை.....

ஒழுகும் மூக்கும்
துடைத்த அடையாளங்களின் மிச்சங்களும்
வழியும் எண்ணையுடன்
அழுத்தி சீவப்பட்ட தலைமுடியும்
ஆனாலும் எது பற்றியும்
பயமோ கவலையோ ஏதுமறியாத
எனக்கே உரித்தான
புன்னகையோடே
பள்ளி சென்ற நாட்கள்....

என் குரல் பெரிதா உன் குரல் பெரிதா
என்னும் குரல் சண்டையில்
உரக்க படித்து உரைத்து படிக்காத
பள்ளிப் பாடங்கள்.....

ஐந்து பைசா ஆரஞ்ச் மிட்டாய்க்கு
ஐந்து பேர் பங்கு போட்டதும்
சட்டை வைத்து காக்காய் கடி போட்டதில்
சட்டை ஒட்டிய துணுக்குகளே
என் பங்கானதும்...

கோள் மூட்டி மூட்டி
நொச்சிகோல் முறிந்ததும்..
குட்டு வாங்கும் பயத்தில்
அக்குளில் வெங்காயம் வைத்து
காய்ச்சல் வர வைத்ததும்....

நான் தட்டிய தூசு
மறைவதற்குள்
ஓடுகிறது நிழற்படமாய்....
ஏக்கத்தோடு.....

என்றாவது ஓர் நாள்.............

என் கண் வழியே வழிவது
கண்ணீர் அல்ல பெண்ணே.......
உன் மீதான என்
அளவில்லா காதல்..........

ஓராயிரம் புன்னகைகள்...
ஓராயிரம் வார்த்தைகள்...
ஓராயிரம் பரிசுகள்...
இவை யாவும் உணர்த்தவில்லை.....

ஒற்றை கண்ணீர் துளியே
முழுதாய் உணர்த்தியது
என்னுள் இருக்கும் உன்னையும்
உன் மீதான என் காதலையும்.....

உன்னை பற்றி மட்டுமே
சிந்திக்கிறது மனம்
கடிவாளம் இட்ட
குதிரையாய்.....

உன்னை புரிந்த
என் இதயத்திற்கு
உன் சூழ்நிலை புரியவில்லை...
சொன்னாலும் கேட்கவில்லை....

காயங்களை கீறி
அதில் தெறிக்கும்
வலிகளை...கண்ணீரை ..
ரசிக்கிறது மனம்.......

என் செடியின்
வண்ண ரோஜா நீ
என் முட்கள் உன்னை காயப்படுத்தவே
முனைப்பாய் இருக்கின்றன........

தாயின் கருவறை...
இறுதியின் கல்லறை
இரண்டுக்கும் இடையே
உன் இதய அறை......

நினைவு வேலியிட்டு
அடை காத்து வா....
என் காதலை......

என்றாவது ஓர் நாள்

பொரிக்க கூடும்
என் காதலும் கனவுகளும்
கலந்த
என் கவிதை குஞ்சுகள்......

என் இதயத்தை
கண்ணீரால் கழுவி
கவிதைகளால்
அலங்கரித்து

காதலால் பூஜிக்கிறேன்
நீ அதில்
இருப்பதால்

மௌனமாய் இரு...

மௌனமாய் இரு...

புத்தனை போல...
புன்னகை தவழ....

உன்
உள்ளத்தின்
வார்த்தைகள்
உதடுகளை
தாண்ட விடாதே....

அவை
உன்னைபற்றியாயினும்
உன்னோடிருப்பவரை பற்றியாயினும்..

நன்மையோ? தீமையோ?
நாவை அடக்கிக்கொள்...
அது
நன்மையே பயக்கும்.....

நிறைவேறாத ஆசைகளை
நினைவுபடுத்தாதே...
அது
நிம்மதியை
குலைத்து விடும்.......

மீனுக்கு உணவு
புழுக்கள்தான்
என்றாலும்
தூண்டிலில் இருக்கும் போது
அவையே
எமனாகவும் மாறக் கூடும்...

அது போலவே
ஆசைப்படு தவறில்லை...
ஆனால்...
ஆசைகள் நிறைவேறும் என்றால் மட்டும்....

இல்லையெனில்...
ஆசைப்பட்ட காரணத்தினாலே
அசிங்கப்பட்டும் போவாய்...

கவனம்
மௌனம்
சிறந்த மருந்து
மனதின் காயங்களுக்கு......

நாய்க்குட்டி மனது.....

புன்னைகைக்கும்
உதடுகள் தெரிவிக்கவில்லை...
உள்ளத்தின் வலிகளை...

கனக்கும் மனத்தின்
வாயில்களாய்
கண்கள் மட்டுமே
கலங்கிக் கொண்டு.........

நிஜங்கள் தந்த
வலிகளை விட
உன்
நினைவுகள் தந்த
வலிகள்
கொடுமையானவை...............

இப்படியிருந்திருந்தால்.........
என்
இழந்த தருணங்களுக்காக
ஏங்குகிறது மனது......

நாய்க்குட்டி மனதுதான் எனது..
எச்சத்தை எவர் போட்டாலும்
தின்றுவிட்டு
வலாட்டிக்கொண்டே
பின்னால் போகிறது
விரட்ட விரட்ட..................

எச்சமிட்டவருக்கு
தெரிந்திருக்கலாம்...
நாய்க்குட்டியின் மனது

நாய்க்குட்டிக்கு தெரியமா ?
எச்சமிட்டவரின் மனது??

எங்கோ எறிய வேண்டிய
மிச்சத்தை
இங்கே எறிந்தார் என்று......

எறிந்ததும் குற்றமில்லை..
தின்றதும் குற்றமில்லை..
வாலாட்டிக்கொண்டே
போனதுதான் குற்றம்......

என்ன செய்ய....
நாய்க்குட்டி
என்றுமே...
நாய்க்குட்டி தான்........

என் கிராமத்து நாட்கள்....

இனிய குருவிகளின்
இன்னிசையோடு
மெல்ல விடிந்திருந்தன
என் கிராமத்து நாட்கள்....

கரையோர நடையோடு
கருவேலங்க்குச்சி பல்துலக்கல்
அரப்பு வைத்த தலையோடு
கிணற்றடி குளியல்.....

திசையெங்கும் வீற்றிருக்கும்
தெய்வங்களின் தரிசனத்தோடு
பசியையும் ரசித்தவாறே
பறவைகளுடனும் பக்கத்துடனும்
பகிர்ந்துண்ணல்......

நுங்கு வண்டிப் பந்தயங்கள்
மாட்டு வண்டிப் பயணங்கள்
வெற்றிலை சிவப்போடு
வெள்ளந்திப் புன்னகைகள்...

அரச இலைப் புல்லாங்குழலோடு
ஆற்றங்கரை விளையாட்டுக்கள்
ஊர்த்திருவிழாவில்
உறவுகளோடு உலாவல்....

வெட்டுக்குத்து இல்லாமல்
எந்த விழாவும் நிறையவில்லை
ஆனாலும் ஊர்ப்பாசம்
குறையவே இல்லை...

ம்ம் என்ன செய்ய....

நினைவுகள் மட்டுமே
இனிக்கின்றன என் கிராமம் போல
நிஜங்கள் எப்போதும்
கசக்கின்றன
உங்கள் நகரம் போல...

என் வாழ்வின் தேவைகளை.....

அதிகாலை சிட்டுக்குருவியின் இன்னிசை...
தட்டில் வந்து கொத்தித்தின்னும் காக்கா...
அழகாய் அசைபோடும் பண்டங்கள்....
அமைதியாய் இருக்கும் என் கிராமம்....

வரி வரியாய் உழுதுவிட்ட காடுகள்..
வரப்பின் மேல் தவமிருக்கும் நாரைகள்...
காற்றெல்லாம் மணம் பரப்பும் பூக்கள்...
நிலமெல்லாம் நிழல் பரப்பும் மரங்கள்....

ஊரெல்லாம் ஓய்வெடுக்கும் சாவடி...
அனல்பறக்கும் ஆடு புலி ஆட்டம்....
விளையாடிக் களித்திருந்த புழுதிக்காடு....
களைப்போடு கண்ணயர்ந்த மாமரத்தடி...

வளையோடு வேய்ந்திருக்கும் எனது வீடு....
நான் உண்டுறங்கி வளர்ந்திருந்த வீட்டுத்திண்ணை.....
அவசர தேவைகளுக்கு அண்ணாச்சி மளிகைக்கடை...
அவசர உதவிக்கு அடுத்த வீட்டு அப்பத்தா....

அம்மா கைபட்ட அதிரசம்...
அத்தை அன்போடு சுட்டுத்தந்த நெய்முறுக்கு.....
பாசத்தோடு பறிமாறிய பழையசோறு....
நேசம் நிறைந்திருந்த நீர்மோர்......

எங்கு தேடியும் கிடைக்கவில்லை நகரத்தில்....
என்ன செய்ய....
வாழ்வின் தேடல்கள் கிராமத்திலும்
வாழ்வின் தேவைகள் நகரத்திலுமாய்.....

புன்னகை மறைத்த பொய்களோடு
இதயம் தொலைத்து தேடுகிறேன்...
தேடல்களை தவிர்க்க வைத்த
என் வாழ்வின் தேவைகளை.....

வேங்கைகளின் மைந்தர்களுக்கு...

நிகழ்கால நெருடல்களுக்குள்
எதிர்கால ஏக்கங்கள்
புதைந்திருக்கலாம்....

இறந்த கால கனவுகளில்
சில எப்போதோ
சிதைந்திருக்கலாம்....

சூழ்நிலைக்கு தக்கவாறே
சுய நம்பிக்கை
தளர்ந்திருக்கலாம்...

உதவுவார் யாருமின்றி
உலகமே
தனித்திருக்கலாம்....

நாயினும் கீழாய்
நம்மை சிலர்
மதித்திருக்கலாம்....

தன்மானம் தவிர்த்த சிலர்
நம்மைவிட்டு
பிரிந்திருக்கலாம்....

வேலிகளுக்கிடையே
சில வரலாறுகள்
முடக்கப்பட்டிருக்கலாம்....

எதுவானால்தான் என்ன????
நீயும் நானும்
உயிருடன்தானே இருக்கிறோம்...

விருட்சங்கள் தாங்கும்
விதைகளாய்
கடமைகள் தாங்கி நிற்போம்....

வருந்திய வரலாறுகள்
திருந்தும் வரை
வா இணைவோம்....

உன் வார்த்தையின் வருடல்களுக்காக......

உனக்குமெனக்குமான
கடந்த கால உரையாடல்கள்
ஒவ்வொரு முறை படிக்கும்போதும்
ஒவ்வொரு அர்த்தத்தை தருகின்றன......
என் மன நிலைக்கேற்றவாறு.........

நீயும் நானும்
சராசரிகளின் மீதங்களாகவே
சந்தித்துக் கொண்டோம்...
என்றாலும்...
எங்கோ தவறிய ஒரு நொடியில்
சரி பாதியாய் மாறி விட்டோம்......

அப்படி என்ன இருக்கிறது
எனக்கும் உனக்குமான
இந்த காதலில்...???????

வார்த்தைகள் வக்கிரப்படவில்லை
மாறாக வசீகரிக்கின்றன....

விருப்பங்கள் நிறைவேறா விட்டாலும்
பரஸ்பர புரிதலோடு
பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.....

உன்னை சந்திக்குமுன்...
என் கனவுகளில் உயிர் வாழ்ந்தேன்....

உன்னை சந்தித்த பின்னரோ
உன் நினைவுகளில் மட்டுமே
வாழ்கிறேன்............

சுகங்களை விட
ஏக்கங்களின் வலியே அதிகம்
என்றாலும்...
தருவது நீயென்பதால்
புன்னகையோடு...
என் இமைவழியும் நீரை
உள்ளிழுக்கிறேன்.......

சராசரி என்றால்
சண்டையாவது போடலாம்
நீ என் சரிபாதி ஆயிற்றே..
என்ன செய்ய....

கண்ணீர்க் குளத்தில்
கண்களை நீந்த விட்டு
கனவுகளுக்கு வலை விரித்து
காத்திருக்கிறேன்.....

வாய் மூடி இருக்கிறேன்
வலிகளோடு...
எப்பொழுதாவது
கிடைக்கும்
உன் வார்த்தையின்
வருடல்களுக்காக......

Monday, March 22, 2010

நானும் என்னோடு மழை நாட்களும்.....

என்னவளுக்கு....
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
உனது முகவரி....

என்றோ ஓர் மழை நாளின்
மதியத்தில்....
மழை நீரின் குளுமையோடு
எனைக்கடந்து போனாய் நீ...

அன்றோடு
மண் சேர்ந்த மழை நீராய்
நான் மாறிப்போனேன்...

மழையோசை மீறிய
உன் வளையோசைகள்
ஒலித்துககொண்டே இருந்தன
நீ போன பின்னும்....

எங்கோ திரிந்திருந்த
என் நினைவுகள்
உன் மீது
மையம் கொண்டது அன்றிலிருந்து....

அன்று முதல்
எல்லா மழை நாட்களிலும்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்...

நீ என்னை கடந்து
போவாய் என்ற நம்பிக்கையில்...

வருடங்கள் ஓடியது
வயோதிகம் கூடியது
நிகழவேயில்லை உன் வருகை...

ஆனாலும்
காத்துக்கொண்டிருக்கிறோம்
என்றேனும் நீ வருவாய்
என்பதற்காக

நானும்
என்னோடு
மழை நாட்களும்.....

நன்றி பெண்ணே(?)....

நன்றி பெண்ணே(?)....
அனைத்திற்கும் நன்றி...

இதயம் சிதைத்த காதலுக்கு நன்றி...
இரவை வெறுத்த உன் நினைவுகளுக்கு நன்றி...
பகலைத் தொலைத்த உன் பாசத்திற்கு நன்றி...
பாராமுகமாய் நீ போவதற்கும் நன்றி....

கனவுகளை வளர்த்த உன் கண்களுக்கு நன்றி..
கவிதைகள் விதைத்த உன் வார்த்தைக்கு நன்றி...
காலம் கடந்த உன் அன்பிற்கு நன்றி....
கண்மூடி இன்று போவதற்கும் நன்றி.......

என் காதலை களங்கப் படுத்தியமைக்கு நன்றி...
என் நட்பையே தவறாக்கிய உன் திறமைக்கு நன்றி..
என்னை நம்பிய உன் நம்பிக்கைக்கு நன்றி...
உண்மை உரைத்த உன் உள்ளத்துக்கு நன்றி.....

என்னை இன்று ஊமையாய் செய்ததற்கு நன்றி...
என் மௌனத்தின் பின்னாலான உன் வரிகளுக்கு நன்றி...
காதலெனும் பேரில் நீ தந்த காயத்துக்கு நன்றி...
பொய்யைக்கூட பொருத்தமாய் சொன்னதற்கு நன்றி...

மெல்ல விலகும் இருளுக்கு நன்றி...
என்னை விழித்தெழ வைத்த நொடிகளுக்கு நன்றி...
விருப்பத்தோடு உன்னை வெறுக்க வைத்தாய் நன்றி...
திரும்ப என் வாழ்வில் வராதிருந்தால் கோடி நன்றி....

நான் கொண்ட தோழமைகள்....

உன் விழி மீட்டிய
என் இதயத்தில்
இசையாய் கிளர்ந்தெழுந்தது
என் காதல்.......

அதில்...
ஒலியாய் நானும்
மௌனமாய் நீயும்...
சங்கமித்துகொண்டோம்....

ஒலிகளால் நிரம்பிய நேரங்களில்
சிறு மௌனம்கூட இசையாகும்
என்பதைக்கூட
அன்றுதான் அறிந்தேன்.....

காதலா காமமா என்றறியாத
உனது வேட்கையின் விதைகள்..
காதல்
விருட்சமாய் படர்ந்தது
எனக்குள்....

நமது காதலை
நீ வாசித்தாய்...
நான் சுவாசித்தேன்..
வாசிப்பு வக்கிரப்பட்டபோது
சுவாசிப்பு தடைபட்டது...

அன்பால் உருவான என் இதயம்
உன்னால்
ஆயிரம் துண்டுகளாக்கப்பட்டது
அப்போதுதான்....

ஒவ்வொரு துண்டுகளிலும்
உன்னையே பார்த்து
அழுவேன் என்று கூட
நீ நினைத்திருக்கலாம்....

ஆனால்
ஒவ்வொரு துண்டுகளிலும்
நட்சத்திரமாய் மின்னியது
நான் கொண்ட தோழமைகள்....
இருண்டவானின் விடிவெள்ளிகளாய்...

உன்னை சந்திக்காமலிருந்திருந்தால்
சந்திக்கவே இயலாமல் போயிருக்கும்
என் வானின் நட்சத்திரங்களை....

உன்னை மறக்க நினைக்கவில்லை....
நன்றிக்குரியவளாகவே
வணங்க நினைக்கிறேன்...
எனக்கான தோழமைகளை
இனம்பிரித்துக் காட்டியதற்கு....

வானின் முதல் துளி........

வானின் முதல் துளி
அதுவே
மண்ணின் உயிர்த்துளி...

தூறலாய் பெய்து
குழந்தையாய் கொஞ்சும்...

சாரலாய் மாறி
காதலியாய் சிணுங்கும்...

பருவத்தோடு பெய்து
தாயாய் அரவணைக்கும்....

சில சமயம்
அரசனாய் கோபப்படும்
ஆத்திரம் தீர அடிக்கும்

அடை மழை
ஆலங்கட்டி மழை
தட்ப வெட்பத்துக்கேட்ப
பருவ மழை....
புரட்டிப் போடும்
புயல் மழை...

பெய்தும் பெய்யாமலும்
கொடுத்தும் எடுத்தும்

இன்று வரை
அகிலத்தின் ஆணிவேராய்
கடலுக்கும் வானத்துக்கும்
இடையே கைவீசி நடக்கும்....

பருவநிலை சீர்கேடுகளால்
அமில மழை பெய்யுமாம்
அறிந்தவர்கள் சொல்கிறார்கள்...

என்றோ பெய்யும்
அதைப்பற்றி நமக்கென்ன கவலை

சுற்றுப்புறம் சீரழிந்தால் நமக்கென்ன?
நம் சொந்தப்புறம் நன்றாகவே உள்ளது...

முன்னோர் வளர்த்த காடு...
மூளியாகி பெருநகரமானது
நம்மால்...

நம் பிள்ளைகள் அந்த தவறை
மீண்டும் செய்ய முடியாது
ஏனெனில்
நாம்தான் காடுகளே வளர்க்கவில்லையே....

எப்படியாயின் என்ன?
அமில மழை பெய்வதற்குள்
அழி(ந்)த்துவிடுவோம்
மரங்களோடு நாமும்....

அமில மழை பெய்யும் நாளில் மட்டும்
வானின் முதல் துளி
மண்ணின்
கண்ணீர்த்துளி....

நீ தந்த காதலோடும்.....

உனக்காக விழித்திருந்த
உறக்கம் தொலைத்த இரவுகள்....

உனக்காக தவித்திருந்த
இரக்கமில்லா பொழுதுகள்....

உன் குரல் கேட்க காத்திருந்த
என் கேட்காத செவிகள்....

உன் முகம் பார்க்க ஏங்கியிருந்த
என் பார்வை இல்லா விழிகள்........

உணவு தவிர்த்த பொழுதுகளில்
உன் நினைவு மட்டுமே.....

என் செய்து என்ன??????
நீயும் நானும்....
நீண்ட தொலைவுகளிடையேயும்
நீங்காத நினைவுகளிடையேயும்....

போதும் பெண்ணே...
இந்த பொல்லாத காதல்...

வலிகளை தாங்குவேன் என்றாலும்
வலிகள் மட்டுமே
வாழ்க்கையல்ல........

கனவுகள் கருக்கொள்ளும் போதே
கலைக்கப் படுகின்றன...

நிறைவேறாத ஆசைகளிடையே
நிறைந்து கொண்டிருக்கிறது..
உனக்கான என் பொழுதுகள்...

நீ தந்த காதலோடும்.....
நான் கொண்ட ஏக்கத்தோடும்......

பின்னிசையாய்.....

உயர்ந்த மலை ஒன்றின்
உச்சியில்
அமர்ந்திருக்கிறேன் நான்....
புன்னகையோடிய பொய்களின்
ஆடைகளற்று
நிஜங்களின் நிர்வாணத்தோடு....

தலைதடவிப் போகும்
மேகங்களின் வருடலோடு
விழிமூடி ரசித்திருக்கிறேன்
என் மேல் பெய்யும் மழையை...

ஒலிகளற்ற மௌனத்தின்
உன்ன்னதத்தில்
உலகம் மறந்திருந்த நேரத்தில்.......
நடந்தவை அனைத்திற்கும்
மௌன சாட்சியாய் நின்றிருக்கும்
மலையோடு
மனித சாட்சியாய் நானும்.........

பொழியும் மழை
கழுவிப்போகிறது
மனமென்னும் குப்பைத்தொட்டி
சேகரித்து வைத்திருந்த
என் நினைவுகளின் அழுக்குகளை....

உடல்தடவிப் போன
ஊதல் காற்றில்
உயிர் சிலிர்த்த நொடிகளில்
புதிதாய் பிறந்ததாய் உணர்வு...

புதிய நம்பிக்கையோடு
புறப்படுகிறேன்
கீழிறங்கும் வழியெல்லாம்
மலை தாங்கி நிற்கும்
மரங்களின் கிளைகளில்
முளைத்த இலைகளிலிருந்து
விழுகின்றன.....

எனைக்கழுவிப்போன
மழைத்துளிகள்....
என் மனம் பாடும்
பாடலுக்கு
பின்னிசையாய்.....