Wednesday, December 9, 2009

காதல்
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத போதும்
காலம் காலமாய்
கவிதைகளின் கருப்பொருளாய்
கனவுகளின் மெய்ப்பொருளாய்
உணர்வுகளின் உருவகமாய்
உயிர்களுக்குள்ளே
உறவாடிக்கொண்டிருக்கிறது......

மண் மீது இருந்தாலும்
மண்ணோடு விண் தாண்டி
பிரபஞ்சத்தின் எல்லையையும் தாண்டி
பிரவேசிக்கும் வல்லமை
காதலுக்கு மட்டுமே உண்டு.....

இது கடவுளும் அல்ல
ஏனெனில் கடவுள்
அனைவருக்குள்ளும் தோன்றுவதில்லை
இது உணர்வும் அல்ல
ஏனெனில் ஒரு சில மணித்துளிகளில்
ஒய்வு பெற்றுவிட.....

இது வாழ்வும் அல்ல
ஏனெனில் நமக்கான காதல்
என்னோடோ உன்னோடோ
முற்றுப்பெறுவதற்கு
காலம் கடந்தபின்னும்
வாழ்கிறதே சில காதல்கள்......

பின் காதல் என்றால்தான் என்ன?
யோகிக்கு கடவுள்
போகிக்கு காதல்
ரோகிக்கு காமம்
பாவிக்கு பாவம்
இதுதான் காதல்.....

என்றாலும்
இதுவே முற்றான
முடிவும் அல்ல....
எனவே
தேடுவேன் காதலை
எனக்கான வாழ்வின் எல்லை வரைக்கும்..................

Monday, November 16, 2009

நான் சகுனியுமில்லை
நீ தர்மனும் இல்லை
நட்பு சதுரங்கத்தில்
நம்மை வைத்து சூதாட.........

உன்னோடு தேவர்கள் இருக்கலாம்
என்னோடு அசுரர்கள் இருக்கலாம்
ஆனாலும் நீ வாமனனும் இல்லை
நான் மாவலியும் இல்லை
என்னிடம் நீ கேட்டு
நான் தர................

நான் கர்ணனும் இல்லை
நீ துரியோதனனும் இல்லை
அங்க தேசத்தை நீ தரவும்
செஞ்சோற்று கடன் நான் தீர்க்கவும்...........

இருவரும் சாதாரண
மனிதர்கள் மட்டுமே.......
உணர்வுச் சுழல்களில்
உழல்பவர்கள் தானே.......

வெறுப்பது மனித குணம்
பொறுப்பது தேவ குணம்
விரும்புவது தெய்வ குணம்
இருந்தாலும்
நாம் மனிதர்கள்தானே........

நான் தேவனாகவுமில்லை
நீ தெய்வமாகவுமில்லை
எனவே
பிரிவோம் தோழமையே
வெறுப்பெனும் நிழலோடு..
மலர் மலரும் என்றுதான்
மனம் நினைத்தது.......
உதிரும் என்று யார்
எதிர் பார்த்தது........
வான் கடந்து
வெளி கடந்து
தொடரும் நட்பென்றுதான்
நான் நினைத்தேன்....
முகம் கடந்து
மொழி கடந்து
இதயம் தொடும் என்றுதான்
எதிர் பார்த்தேன்....
வலி கொடுத்து
சிறகொடித்து
நீ ரசிக்க நான் நொந்தேன்.......
நிலவின் நீங்காத கரையாய்
மனதின் ஆறாத வடுவாய்
மாறிப்போனதே நட்பு..........
புரிதல் எளிதல்ல
புரிந்தபின் பிரிதலும் எளிதல்ல.......
வரமாய் தேடிய நட்பு
சாபமாய் மாறிய
நிமிடங்களே
நான் இறக்கும் வரையிலும்
இறக்க முடியா சுமையாய்
இதயத்தில் இடம் பிடித்திருக்கும்...
இந்நாள் வரையிலும்
இதம் கொடுத்த
தோழமைக்கும்
இன்று
இனம் காணா பிரிவினைக்கும்
என் நன்றிகள்
போகிறேன் வணக்கம்........
உண்ண உணவுண்டு
உறங்க வீடுண்டு
வீண் கதைகள் பேசி
வில்லங்க சண்டையிட
வீடு தோறும் திண்ணையுண்டு

எண்ணம் பலவுண்டு
உண்டு களித்தே
உறங்கி கிடந்தாலும்
வானேறி நிலா தாண்டி
விண்ணாள ஆசையுண்டு

சோம்பேறியானாலும்
சுக வாழ்வு வாழ
குறுக்கு வழி சூத்திரங்கள்
கொண்டிருக்கும் சாத்திரங்கள்
தேடும் ஆசை உண்டு

நல் வழி போய்
நாயினும் கீழாய்
அல்லும் பகலும்
அலைந்தே திரிந்தாலும்
கிட்டுமா வெற்றி ?????

கேட்கின்ற இளைஞனுக்கு
கூறும் விடை தெரியாமல்
குழம்புகின்றேன் நான்
விடை தேடி போகிறேன்
கிடைத்தால் திரும்புவேன்

அதுவரை பொறுத்திருப்பீர்
ஆனவரை காத்திருப்பீர்
மண் கொண்டு மூடி விண்தாண்டி வீசினாலும்
உண்மை ஒருநாள் உறக்கம் விழிக்கும்
இவ்வுலகை ஜெயிக்கும்.................
நீயும் நானும்
உரையாடிக்கொண்டிருந்தபோது
நம்மோடு
உறவாடிக்கொண்டிருந்தது
நம்மீதான நம் காதல்...

உன்மீதான என் அக்கறையும்
என் மீதான உன் அக்கறையும்
மௌனமாகவே
மொழிபெயர்க்கின்றன
நம் காதலை......

இருவருக்குமான உறவை
நட்பென்று நாம் சொன்னாலும்
நட்பே கேட்கிறது நம்மை
நீங்கள் சொல்வது
நிஜமா என்று..?

உண்ணா பகலும்
உறங்கா இரவுமாய்
எனதும் உனதுமாய்
இருவரின் பொழுதுகளும்
பரிகசிக்கின்றன நம்மை நோக்கி...

சொல்லாத காதலின்
சுகமான வலிகளோடே
மெல்லமாய் பிரிகிறது
உதடுகள் புன்னகையாய்...
உன்னிடம் மட்டும்...

இன்றேனும் சொல்லவேண்டும்
என்று உறுதியோடு வந்தாலும்
ஓடி ஒளிகின்றன வார்த்தைகள்
ஊமையான உள்ளத்துக்குள்
என்ன செய்ய....?

நீரில் கலந்த மீனின்
கண்ணீர் போலவே
உன்னுள் கலந்த என் காதலும்
என்னை தவிர
யாருக்கும் தெரியாமல்...........
உயிரே

உன் கண் சிமிட்டல்களே
கவிதைகளாய்
உன் இதழசைவுகளே
இலக்கியமாய்
கொண்டிருக்கிறேன் நானிங்கு

அருகில் வந்தால்
அரும்பி கொல்கிறது வெக்கம்
விலகிச் செல்லும்
பொழுதுகளிலோ
வெறுத்து போகிறது வாழ்க்கை

கருப்பு வெள்ளை
கனவுகளில்
நீ மட்டுமே நிர்மலமாய்
விலக்க நினைத்தாலும்
விலக்க முடியாத நிழல் போல

என் செய்ய
நினைவும் நிஜமும்
எதிரெதிராய்
விளையாடுகையில்
தவிப்பதை தவிர.......
தோழமைக்கு............

தாயின் கருவிலுருந்து
தந்தையின் தோள் வரை
தன்னிலை மறந்து
தவழ்ந்திருந்ததொரு காலம்.......

ஆரம்பப்பள்ளிக்கு
அகரங்கள் படிக்க
அழுதபடி செல்ல
அடம்பிடித்ததொரு காலம்......

சின்ன சின்ன சேட்டைகளோடு
செல்ல சண்டைகளோடு
பள்ளி நண்பனோடு
பயின்றிருந்ததொரு காலம்......

விடலைப் பருவத்தின்
விவேகமில்லா வேகத்தில்
என்னை மீறி ஏதுமில்லையென
இறுமாந்திருந்ததொரு காலம்........

கல்லூரி பருவத்தில்
தவிர்க்கவியலா ஈர்ப்புகளில்
தயக்கங்களோடே
தவித்திருந்ததொரு காலம்......

கையில் பட்டத்தோடு
கண்ணில் கனவுகளோடு
வேலை தேடித்தேடி
விரக்தியோடிருந்ததொரு காலம்.....

வேலை கிடைத்தபின்னர்
தூய நட்பு தேடி
கானலைக் கடலென்றே
கண்ணயர்ந்ததொரு காலம்.....

பருவ நிலைகள் தாண்டி
ஆண் பெண் பேதங்கள் நீக்கி
அரவணைக்கும் நட்புக்காக
அலைபாய்ந்ததொரு காலம்....

காலங்கள் கரைகின்றன
கனவுகள் நிறைகின்றன
காத்திருக்கிறேன்
நான் தேடிய நட்புக்காக..................
என் நட்புக்குளத்தில்
கல்லெறிந்தவர்களுக்கு.......

விழுந்த கல்லினால்
எழுந்த நீர்த்துளிகள்
உங்கள் மேல் பட்டிருக்கலாம்
அது என் தவறல்ல
நட்பின் தவறு.........

நனைய மறுப்பவர்கள்
மழையை உணர முடியாது
அது போலவே
நட்பையும்.......................

வானம் என்பது
வெகு தூரத்திலில்லை
நம் தலைக்கு மேலேதான்
அதுபோலவே நட்பும்
வேறெங்கும் இல்லை
நமக்கிடையேதான்.........

நம் நட்பெனும் மரத்தில்
நானுமொரு கிளையாய்
பூவோடும் காயோடும்
பூத்துக்குலுங்க விரும்பவில்லை
வேராய் இருக்கவே
விரும்புகிறேன்.........
வேறாய் எண்ணவில்லை....

உனக்குமெனக்குமான
உரையாடல்கள்
நமக்கு சொல்கிறது
நம்மைப்பற்றி
நம் நட்பை பற்றி....

பகர்வது என் நோக்கம்
உணர்வது உன் விருப்பம்
எதுவாயினும்
ஏற்றுக்கொள்கிறேன்
புன்னகையோடே......
உறக்கத்தின் இடைவெளியில்
உன்னதமாய் ஒரு கனவு............
என்னை நாடி நட்பு கடவுள் வந்தார்
நட்பு கடவுளிடம்
நான் கேட்டேன்
நல்ல நண்பனை பெற
நான் என்ன செய்ய வேண்டும் என..........
அவர் சொன்னார்
ஐம்புலனைத் தவிர்த்து விட்டு
ஆறாம் புலனாய் அன்பை வை......
உன் இதய வீட்டில்
புன்னகை பந்தலிட்டு
நம்பிக்கை தோரணம் கட்டு.....
உங்களிருவருக்குமிடையே
மன்னித்தலே தட்சணை
மறத்தலே பரிசு
பரஸ்பர புரிதலே உறவு
விட்டு கொடுத்தலே விருந்து
தட்டி கொடுத்தலே மருந்து.....
நல்லதை விதைத்தால்
நல்லதே விளையும்
நீ நல்ல நண்பன் எனில்
நல்ல நட்பே அமையும்......
விழித்து பார்த்தேன்
நட்பாய் நீ....
புன்னைகையோடு........
மழை பெய்த வானம்
நன்கு நனைந்த பூமி

மெல்லிய தூறல்களால்
மிதக்கிறது மனது
தொட்டாச் சிணுங்கி போல
துவல்கிறதே அவ்வப்போது
எது தேடி அலைகிறது
இடைவிடாமல்........??????????

எண்ணவியலாத உறவுகளையா..?
எண்ணுமளவு இல்லாத நட்புகளையா?

இருப்பதும் பிடிக்காமல்
இருக்கவும் பிடிக்காமல்
நொடிக்கு நொடி மாறுகின்றதே?

பொன்னோடு பொருள் வேண்டியா ?
புகழோடு அருள் வேண்டியா?
மண்ணோடு இல் வேண்டியா?
மனம் நிறைய மகிழ்ச்சி வேண்டியா?

பொன்னோடு புகழ் வேண்டின்
புனைவேன் பொய்கள் பல
புகழோடு அருள் வேண்டின்
செல்வேன் கோவில் பல
மண்ணோடு இல் வேண்டின்
மிகுவேன் ஆசை பல
மனமொடு மகிழ்வு வேண்டின்
தேடுவேன் வேறு பல

நல்லதொரு தோழமை வேண்டியே
நாடினேன் நட்பு பல
நாடி வரும் தொல்லையென்று
நகர்வோரின் நட்பென்றாலும்
நட்பென்ற காரணத்தினால் நாடினேன்
நாளும் நாளும்

பொய்யுரையும் புனைவுரையும்
நெஞ்சினிக்க புகழுரையும்
புகல்வேனல்லன்

உள்ளமது கள்ளமில்லை
உணர்வுகள் பொய்யுமில்லை
தன்னொழுக்கம் தவறி
தடுமாறும் சூழலில்லை

ஆனாலும்

எதுவொன்றோ குறைய
தேடுகின்றது மனது
மழை விட்ட வானத்துக்கும்
நனைந்துவிட்ட பூமிக்குமிடையில்
சில்லென்ற காற்றாய்.......
நிஜங்களை தவிர்த்து விட்டு
நிழல்களில் தேடுகின்றேன்....
வீட்டுக்குள் வைத்து விட்டு
வீதிகளில் தேடுகின்றேன்

உணர்வுகளை உருக்கி வைத்து
உள்ளத்தில் ஒளியேற்றி
இமைமூடி மனம் திறந்து
இன்னும் பல செய்து

எது செய்யினும்
இயலாததாய் இங்கே ஓர் நட்பு

இதயத்தை திறந்து வைத்தேன்
இங்கிதத்தை தெளித்து வைத்தேன்
உணர்வுகளை ஒதுக்கி வைத்தேன்
உள்ளன்பு கைக்கொண்டேன்

நகுதல் மட்டுமன்று
அவ்வப்போது நாணுதலும்
இருக்குமென்று எண்ணியே
நானும் வந்தேன்

நகுதலும் உண்மையில்லை
நாணுதலும் தேவையில்லை
பொய்யோடு பலவினைகள்
புரிதலே போதுமிங்கு

அன்பு தேவையில்லை
அறிவுரைக்கோ இடமேயில்லை
பண்பு தவறினாலும்
பதறுவார் யாருமில்லை

என்ன செய்ய
நண்பர்களை தேடவந்து
நட்பையே தேடுகின்றேன்
மீண்டும் மீண்டும்.....
மழை நனைத்து போன
மரங்களை
தலை துவட்டி போகும்
காற்று போலவே
எனை தீண்டி போகிறது
உன் காதல்...

கை கோர்த்து நடந்த போதும்
விழி கடந்து போகும் போதும்
மனம் திறந்து
கனம் கரைத்து போகிறது
உன் காதல்...

சிலை மேவும் உளி போலவே
உன் வழி மேவும் என் விழிகள்
வரும் போதும்
போகும் போதும்
தயக்கமாய் நெருங்கி வந்து
தாவலோடு திரும்பும் அழகை காண...

தவிர்க்கவியலா தருணங்களில்
விவரிக்கமுடியா புன்னகையோடு
கடந்து போகிறாய் எனை தாண்டி
கனத்த மௌனத்தோடு
கண்ணில் ஏக்கத்தோடு
விழுந்து கிடக்கிறேன் நான்
நீ நடந்த வீதியெங்கும்.............
என்னவளுக்கு,
எனக்கு பிடித்தவையில்
எதுவுமே உனக்கு பிடிக்கவில்லை.
உனக்கு பிடித்தவையில்
ஒன்றில் கூட எனக்கு ஆர்வமில்லை.
வாசிப்பதில் துவங்கி வசிப்பதுவரையில்
உனக்கும் எனக்கும்
ஒற்றுமையில்லை.
வண்ணத்தில் துவங்கி
எண்ணங்கள் வரையிலும்
துருவங்களைபோலவே
எதிரும் புதிருமாய்
ஆனாலும் என்ன?
இருவருக்குமான இடைவெளியில்
நிரம்பியிருக்கிறது
உன் மீதான என் காதல்.
அந்த காதலைப்பற்றி
இந்த ஏழையின் குடிசையில்
நிரம்பியிருக்கும் காற்று கூட சொல்லும்
கவிதைகளாய்...................................
தோழமைக்கு,
பருவ மழையின் சாரல்களுக்கிடையே
நீண்ட சாலையின் இருபுறமரங்களின் நடுவே
நடந்து போகிறேன் நம் நட்பின் நினைவுகளோடு
மழை நின்றபின்னும் விழும் மரங்களின் துளிகளாய்...
நீ பிரிந்து போன பின்னும் உன் நினைவுகள்.....
முகம் மோதும் தூய காற்றாய்
என் மனம் மோதும் உன் தூய நட்பு.....
தூரத்து வானமாய் நீ
தொடர்ந்து வரும் மேகமாய் நான்
என்று தொடுவேன் எனக்கு தெரியாது
ஆனாலும் தொட்டு விடும் நம்பிக்கையில்தான்
தொடர்கிறது என் பயணம்..................
உன்னை நோக்கி.........
என் கண்கள் காணும் கனவுகளில்
நீ மட்டுமே நிரந்தரமாய்.
விழி திறந்தால் காட்சியாய் நீ
விழி மூடினால் கனவாய் நீ
என் அர்த்தமில்லா மௌனத்திற்கு
ஆதாரமாய் உன் நினைவுகள்.
என் சிரிப்பிற்கு பின்னால்
சிறகடிக்கும் நம் கனவுகள்.
என் கவிதையெனும் கருப்பையில்
கருவாய் நீ.
என் காதலெனும் வகுப்பறையில்
பாடமாய் நீ.
என் உறவுகளின் வழிமொழியில்
பேதையாய் நீ.
என் உணர்வுகளின் கருவழியில்
ராதையாய் நீ.
ஆனால் பெண்ணே
நம் காதலெனும் ரயிலுக்கு
தண்டவாளங்களாய் நாம்.
இணைந்தாலும் பிரிந்தாலும்
கவிழ்ந்துவிடும் நம் காதல்.
என் நினைவுகளில் உதிர்ந்த மலரே......
கனவுகளிலாவது மலர்ந்து மணம் வீசு.........
மகிழட்டும் நம் காதல்
முகமறியாத தோழமைக்கு
முதலும் முடிவுமான வணக்கங்கள்...
என்னைப்பற்றி உங்களின்
உயர்வான எண்ணங்களுக்கு
கோடி நன்றிகள்....
நட்பு குளத்தின் கரையில்
நடந்த சுவடுகளாய்....
உன்னுடனான உரையாடல்கள்
உள்ளமெங்கும் விழிநீரின் ஈரத்தொடே
வியாபித்திருக்கின்றன......
யார் கண்ணிலும் படாமல்..
சுவடுகள் கால வெள்ளத்தில்
மறைக்கப்படலாம்
ஆனால் சுவடுகளை சுமந்த மண்
என்றும் மறக்காது..........
மண் போலவே நானும் என் நட்பும்
மறைக்கப்பட்டாலும் உன் நினைவுகளை
மறக்கமுடியாது......
கால வெள்ளத்தின் கரையில்
ஏதோ ஒருவிடத்தில்
காத்திருப்பேன்....
உன் நட்புக்காக...
அதுவரையிலும்....
புன்னகையோடு பூத்திருப்பேன்
நாணலாக.............
நன்றி வணக்கம்...
தோழமைக்கு.........
நலமா?
நலத்துடன்தான் இருப்பாய்
என்றே நம்புகிறேன்................
ஜன்னல் வழியே நுழையும்
குளிர்ந்த காற்று போலவே
என் காதுகள் வழியே
நிறையும் உன் நட்பும்
அலைபேசி உரையாடல் மூலம்............
உரையாடல்களின் வழியே
ஊடுருவும் சின்ன சின்ன
சண்டைகளுக்காகவே
சமாதானத்தோடு காத்திருக்கிறேன்.............
சீண்டல்களும் கேலிகளும்
நிறைந்த நம் உரையாடல்கள்
சிரிப்பை மட்டுமே தருகின்றன
எவ்வளவோ வலிகளோடு
இருவருமே இருந்தாலும்........
சிரிக்க மட்டுமே செய்கிறோம்
வலிகளை மறந்து
நட்பின் வலிமையை உணர்ந்து......
நிலவுலவும் வானமதில்
என் நினைவுலவும் நேரம்.....
இரு விழியின் இமை நடுவே
என் கனவுலவும் காலம்........
உருகி வரும் அருவியிலே
தலை நனைக்கும் நேரம்.........
குளிர் காற்றின் நடுவினிலே
நான் எனை மறக்கும் காலம்.........
தெள்ளு தமிழ் பாட்டு
என் செவி நிறைக்கும் நேரம்......
நள்ளிரவின் கருமையிலே
நான் எனை தொலைக்கும் காலம்.....
நல்ல சொல் தேடி
நடை போடும் நேரம்.......
உள்ளமதில் கவிதை வரி
ஊற்றெடுக்கும் காலம்......
இவையனைத்தும்
மறந்ததடி நான்
உன்னை நினைத்த நேரம்.........
உள்ளமது தவிக்குதடி
உன்னை காணாத காலம்......

Sunday, November 15, 2009

எனதருமைத் தோழமைக்கு
என் நெஞ்சார்ந்த வணக்கம்,
என் மீதான எண்ணங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.........
நான்.........?
வரம் கேட்கும் பக்தனுமல்ல
வரம் தரும் சாமியுமல்ல,
நான் சராசரிக்கும் கீழான மனிதன்.
எல்லோரையும் போலவே
எனக்கும் இதயம் உண்டு
இதயத்தில் ஆசை உண்டு
ஆசைகள் நிராசைகளானதுண்டு
அதனால் வலிகளும் உண்டு
ஆயினும் வலிகளை மீறி
புன்னைகைப்பேன்
நண்பர்களிடம்.

எனக்கான வலிகளுக்கு
நான் மட்டுமே காரணம்.
என் புன்னகைகளுக்கு
என் நட்புகளே காரணம்.
நான் உறவுகளால் காயப்பட்டவன்
ஆனாலும் உறவுகளோடே
உழன்று கிடப்பவன்

நான் நனவுலகில் கால் பதித்து
கனவுகளில் கைகோர்த்து
கற்பனைகளில் உலவுபவன்
என்னோடு உடன்வருவது
இயலாத காரியம்...
நான் என்னைத்தேடுவதாய்
எண்ணிக்கொண்டு
என்னோடிருப்பவர்களை தொலைப்பவன்

என்னுடனான நட்பில்
பூக்களைவிட முட்களே
உங்கள் முன் நிறையும்
ஏதாவதொரு முள்
காயப்படுத்தினால்
உங்களைவிட காயப்படுபவன்
நானாகத்தனிருக்கும்.

என் நண்பர்களிடத்தில் குறைகளில்லை
என் நட்பிடத்தும் குறைகளில்லை.
என்னிடம்தான் குறைகள்.
வலிகளை தந்துவிட்டு
வருத்தப்படுபவன் நான்
பயணிக்க விருப்பமிருந்தால்
உடன் வரவும்.
என்நட்பெனும் நந்தவனத்தில்
இன்னுமொரு மலர்கொடியாய்
சுகங்களையும் துக்கங்களையும்
உரமாக்கிகொண்டு
நம்பிக்கை நீர் பாய்ச்சி
அன்பெனும் பூக்களை
அன்றாடம் மலர்ந்துமணம் வீச
வரவேற்கிறேன்
தோழமைக்கு நன்றி...............................