Monday, March 22, 2010

நானும் என்னோடு மழை நாட்களும்.....

என்னவளுக்கு....
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
உனது முகவரி....

என்றோ ஓர் மழை நாளின்
மதியத்தில்....
மழை நீரின் குளுமையோடு
எனைக்கடந்து போனாய் நீ...

அன்றோடு
மண் சேர்ந்த மழை நீராய்
நான் மாறிப்போனேன்...

மழையோசை மீறிய
உன் வளையோசைகள்
ஒலித்துககொண்டே இருந்தன
நீ போன பின்னும்....

எங்கோ திரிந்திருந்த
என் நினைவுகள்
உன் மீது
மையம் கொண்டது அன்றிலிருந்து....

அன்று முதல்
எல்லா மழை நாட்களிலும்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்...

நீ என்னை கடந்து
போவாய் என்ற நம்பிக்கையில்...

வருடங்கள் ஓடியது
வயோதிகம் கூடியது
நிகழவேயில்லை உன் வருகை...

ஆனாலும்
காத்துக்கொண்டிருக்கிறோம்
என்றேனும் நீ வருவாய்
என்பதற்காக

நானும்
என்னோடு
மழை நாட்களும்.....

நன்றி பெண்ணே(?)....

நன்றி பெண்ணே(?)....
அனைத்திற்கும் நன்றி...

இதயம் சிதைத்த காதலுக்கு நன்றி...
இரவை வெறுத்த உன் நினைவுகளுக்கு நன்றி...
பகலைத் தொலைத்த உன் பாசத்திற்கு நன்றி...
பாராமுகமாய் நீ போவதற்கும் நன்றி....

கனவுகளை வளர்த்த உன் கண்களுக்கு நன்றி..
கவிதைகள் விதைத்த உன் வார்த்தைக்கு நன்றி...
காலம் கடந்த உன் அன்பிற்கு நன்றி....
கண்மூடி இன்று போவதற்கும் நன்றி.......

என் காதலை களங்கப் படுத்தியமைக்கு நன்றி...
என் நட்பையே தவறாக்கிய உன் திறமைக்கு நன்றி..
என்னை நம்பிய உன் நம்பிக்கைக்கு நன்றி...
உண்மை உரைத்த உன் உள்ளத்துக்கு நன்றி.....

என்னை இன்று ஊமையாய் செய்ததற்கு நன்றி...
என் மௌனத்தின் பின்னாலான உன் வரிகளுக்கு நன்றி...
காதலெனும் பேரில் நீ தந்த காயத்துக்கு நன்றி...
பொய்யைக்கூட பொருத்தமாய் சொன்னதற்கு நன்றி...

மெல்ல விலகும் இருளுக்கு நன்றி...
என்னை விழித்தெழ வைத்த நொடிகளுக்கு நன்றி...
விருப்பத்தோடு உன்னை வெறுக்க வைத்தாய் நன்றி...
திரும்ப என் வாழ்வில் வராதிருந்தால் கோடி நன்றி....

நான் கொண்ட தோழமைகள்....

உன் விழி மீட்டிய
என் இதயத்தில்
இசையாய் கிளர்ந்தெழுந்தது
என் காதல்.......

அதில்...
ஒலியாய் நானும்
மௌனமாய் நீயும்...
சங்கமித்துகொண்டோம்....

ஒலிகளால் நிரம்பிய நேரங்களில்
சிறு மௌனம்கூட இசையாகும்
என்பதைக்கூட
அன்றுதான் அறிந்தேன்.....

காதலா காமமா என்றறியாத
உனது வேட்கையின் விதைகள்..
காதல்
விருட்சமாய் படர்ந்தது
எனக்குள்....

நமது காதலை
நீ வாசித்தாய்...
நான் சுவாசித்தேன்..
வாசிப்பு வக்கிரப்பட்டபோது
சுவாசிப்பு தடைபட்டது...

அன்பால் உருவான என் இதயம்
உன்னால்
ஆயிரம் துண்டுகளாக்கப்பட்டது
அப்போதுதான்....

ஒவ்வொரு துண்டுகளிலும்
உன்னையே பார்த்து
அழுவேன் என்று கூட
நீ நினைத்திருக்கலாம்....

ஆனால்
ஒவ்வொரு துண்டுகளிலும்
நட்சத்திரமாய் மின்னியது
நான் கொண்ட தோழமைகள்....
இருண்டவானின் விடிவெள்ளிகளாய்...

உன்னை சந்திக்காமலிருந்திருந்தால்
சந்திக்கவே இயலாமல் போயிருக்கும்
என் வானின் நட்சத்திரங்களை....

உன்னை மறக்க நினைக்கவில்லை....
நன்றிக்குரியவளாகவே
வணங்க நினைக்கிறேன்...
எனக்கான தோழமைகளை
இனம்பிரித்துக் காட்டியதற்கு....

வானின் முதல் துளி........

வானின் முதல் துளி
அதுவே
மண்ணின் உயிர்த்துளி...

தூறலாய் பெய்து
குழந்தையாய் கொஞ்சும்...

சாரலாய் மாறி
காதலியாய் சிணுங்கும்...

பருவத்தோடு பெய்து
தாயாய் அரவணைக்கும்....

சில சமயம்
அரசனாய் கோபப்படும்
ஆத்திரம் தீர அடிக்கும்

அடை மழை
ஆலங்கட்டி மழை
தட்ப வெட்பத்துக்கேட்ப
பருவ மழை....
புரட்டிப் போடும்
புயல் மழை...

பெய்தும் பெய்யாமலும்
கொடுத்தும் எடுத்தும்

இன்று வரை
அகிலத்தின் ஆணிவேராய்
கடலுக்கும் வானத்துக்கும்
இடையே கைவீசி நடக்கும்....

பருவநிலை சீர்கேடுகளால்
அமில மழை பெய்யுமாம்
அறிந்தவர்கள் சொல்கிறார்கள்...

என்றோ பெய்யும்
அதைப்பற்றி நமக்கென்ன கவலை

சுற்றுப்புறம் சீரழிந்தால் நமக்கென்ன?
நம் சொந்தப்புறம் நன்றாகவே உள்ளது...

முன்னோர் வளர்த்த காடு...
மூளியாகி பெருநகரமானது
நம்மால்...

நம் பிள்ளைகள் அந்த தவறை
மீண்டும் செய்ய முடியாது
ஏனெனில்
நாம்தான் காடுகளே வளர்க்கவில்லையே....

எப்படியாயின் என்ன?
அமில மழை பெய்வதற்குள்
அழி(ந்)த்துவிடுவோம்
மரங்களோடு நாமும்....

அமில மழை பெய்யும் நாளில் மட்டும்
வானின் முதல் துளி
மண்ணின்
கண்ணீர்த்துளி....

நீ தந்த காதலோடும்.....

உனக்காக விழித்திருந்த
உறக்கம் தொலைத்த இரவுகள்....

உனக்காக தவித்திருந்த
இரக்கமில்லா பொழுதுகள்....

உன் குரல் கேட்க காத்திருந்த
என் கேட்காத செவிகள்....

உன் முகம் பார்க்க ஏங்கியிருந்த
என் பார்வை இல்லா விழிகள்........

உணவு தவிர்த்த பொழுதுகளில்
உன் நினைவு மட்டுமே.....

என் செய்து என்ன??????
நீயும் நானும்....
நீண்ட தொலைவுகளிடையேயும்
நீங்காத நினைவுகளிடையேயும்....

போதும் பெண்ணே...
இந்த பொல்லாத காதல்...

வலிகளை தாங்குவேன் என்றாலும்
வலிகள் மட்டுமே
வாழ்க்கையல்ல........

கனவுகள் கருக்கொள்ளும் போதே
கலைக்கப் படுகின்றன...

நிறைவேறாத ஆசைகளிடையே
நிறைந்து கொண்டிருக்கிறது..
உனக்கான என் பொழுதுகள்...

நீ தந்த காதலோடும்.....
நான் கொண்ட ஏக்கத்தோடும்......

பின்னிசையாய்.....

உயர்ந்த மலை ஒன்றின்
உச்சியில்
அமர்ந்திருக்கிறேன் நான்....
புன்னகையோடிய பொய்களின்
ஆடைகளற்று
நிஜங்களின் நிர்வாணத்தோடு....

தலைதடவிப் போகும்
மேகங்களின் வருடலோடு
விழிமூடி ரசித்திருக்கிறேன்
என் மேல் பெய்யும் மழையை...

ஒலிகளற்ற மௌனத்தின்
உன்ன்னதத்தில்
உலகம் மறந்திருந்த நேரத்தில்.......
நடந்தவை அனைத்திற்கும்
மௌன சாட்சியாய் நின்றிருக்கும்
மலையோடு
மனித சாட்சியாய் நானும்.........

பொழியும் மழை
கழுவிப்போகிறது
மனமென்னும் குப்பைத்தொட்டி
சேகரித்து வைத்திருந்த
என் நினைவுகளின் அழுக்குகளை....

உடல்தடவிப் போன
ஊதல் காற்றில்
உயிர் சிலிர்த்த நொடிகளில்
புதிதாய் பிறந்ததாய் உணர்வு...

புதிய நம்பிக்கையோடு
புறப்படுகிறேன்
கீழிறங்கும் வழியெல்லாம்
மலை தாங்கி நிற்கும்
மரங்களின் கிளைகளில்
முளைத்த இலைகளிலிருந்து
விழுகின்றன.....

எனைக்கழுவிப்போன
மழைத்துளிகள்....
என் மனம் பாடும்
பாடலுக்கு
பின்னிசையாய்.....