Friday, August 14, 2015

கண்மலர்ந்து பார்......

விரல்களாய் வருடினேன்....

நீ விண்மீனானாய்....
இதழ்களால் வருடினேன்....
நீ.....
இதயத்தின் துடிப்பானாய்.....
பெண்ணே.....
உன்னை
காதலாய் வருடினேன்....
நீயோ......
கானல் நீரானாய்.........
எண்ணங்களால் வருடி...
எழுத்துக்களாய் பதிவு செய்து....
வண்ணங்களை வடிக்கவே....
நினைத்திருந்தேன்.....
நீயோ......
புன்னகையாய்
புலம்பெயர்ந்து....
புலமபல்களாய்
வடிவம் கொண்டாய்.....
இன்றோ....
கண்ணீரால் பூஜை செய்து
என காயங்களால்
யாகம் வளர்த்தி...
கவிதைகளால்
அர்ச்சிக்கிறேன்.....
கனவுகளாகவேனும்
கண்மலர்ந்து பார்..

தவறியவனின் உயில்.........

ருவழியில் பிறந்தேன்...
எந்தை கருவிழியில் வளர்ந்தேன்....
இருவிழியில் ஒரு காட்சியாய்
அம்மையப்பரின்
கனவின் வழி
வாழ்வைக் கண்டேன்.....

உறு வழியும்
உதவா வழியுமாய்..
என்னெதிரில் இருக்கக் கண்டு...
தெரிவின் வழி
தீராமால்
தெருவின் வழி திரியக் கண்டேன்....

இதம் தரும் புகையென்றேன்...
சுகம் தரும் மதுவென்றேன்...
நலம் தரும் பொய்களென்றேன்..
ஒழுக்கமது தவறி நின்றேன்...
ஓதுவதும் வீணென்றேன்.....

கனவுகள் இனிமையென்றேன்...
கற்பனையே களிப்பென்றேன்...
அறிவுதரும் மொழி மறந்தேன்...
நல்ல பொருள் நூல் தவிர்த்தேன்....
நல்லோரின் இனம் மறைத்தேன்....

எல்லாம் கடந்து போக...
இன்றோ...
உறையும் வழியின்றி.
தெருவழி திரியும்
திருவில்லா உருவானேன்....

என்னோரே என்னோரே...
எழில் மிகுந்த மண்ணோரே...
இறை தந்த மறையெல்லாம்..
மறை வகுத்த பொறையெல்லாம்
உறையென உறைவோரே....

இன்றோ நாளையோ...
என்னாவி கூடு களையலாம்...
அன்றேனும் உணருங்கள்...
தவறுபவர்களும் திருந்தக்கூடும்....
திருந்தியதால் வருந்தக்கூடும்....

மன்னிப்பே...
மானுடத்துள்....
மறையாமல் உறையும் இறை.....
மன்னிக்காத மனதில்
இல்லை இறை வகுத்த பொறை......

கடந்த காதல்க(ள்).......

அலையலையாய் கிளம்பிய
அவசர நினைவுகளுக்குள்
தொலைந்து போனது
என்னுள் பூத்த நொடிகள்....

கடந்த காலங்களில்
நான் கடந்த காதல்களில்
நெகிழ்ந்த மணித்துளிகள்
புதைந்து கிடக்கின்றன.....

ஐந்தாம் வகுப்பிலிருந்து
ஆரம்பித்த அந்த ஆச்சரியம்
வளர்ந்து கொண்டே இருக்கிறது
தடுப்பணைகள் தாண்டி......

புரியாத பிரியங்களில்
மூழ்கிக் கிடந்த காலங்கள்....
வளர்ச்சிக்குத் தக்கவாறு
மலர்ந்திட்ட தருணங்கள்......

நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் நின்று
கனவுகளாலும் கவிதைகளாலும்
தடுமாறிய பருவங்கள்.....

வயதொன்று கூட
வரியொன்று கூடும்
தென்னையாய்........
ஒவ்வொரு காதலின் பின்னும்...
அனுபவங்களைக் கூட்டிக்கொண்டு...

எல்லோரையும் போலவே...
எனக்கும் காதலினால்..
வசந்தங்களும் உண்டு
வருத்தங்களும் உண்டு...

வசந்தங்களுக்குப் புன்னகைத்து..
வருத்தங்களுக்கு அழுதோய்ந்து
இயல்புக்கு திரும்பும்போதெல்லாம்
எட்டிப்பார்க்கும் இன்னோர் காதல்.....

ஒவ்வொரு முறை மலரும்போதும்
இந்தச் செடியில்
இதுவே கடைசி மலர்
என்றே கருதுகிறேன்.....

உதிர்ந்தபின் உதிக்கும்
இன்னொரு மலர்
புன்னகையோடு புறந்தள்ளுகிறது
என் கருத்துக்களை......

இன்னும் மலரலாம்
ஏராளமான பூக்கள்....
என் இதயப்பூஜைக்கென...
ஆயினும்....

நானே காதலிக்காத என்னை
வலிக்க வலிக்க
காதலித்த பூக்கள்
இன்றெங்கோ வாசம் பரப்பியபடி.....

கடந்தே போகத்தான்
காத்திருக்கிறேன்....
நான் கடந்த காதல்களையும்
எனைக் கடந்த காதல்களையும்........

என் மனமே...ஏகாய் நீ.....

தனிமை நீடித்த
ஒரு வேளையில்
ஏக்கத்தவமிருந்த பொழுதுகளில்
எங்கோ தோன்றிய ஒரு பொறி
தீப்பற்ற..........

என்னுள் எழுந்தன
இவ்வரிகள்.......


காதே நீ கேளாய்...
கண்ணுகத்த காட்சிகளென
உன்னொத்தவர் கூறினும்
காதே நீ கேளாய்.......

வாயே நீ திறவாய்....
உண்மை நிலையென
உன்னுள்ளம் விளம்பிடினும்
பிறர்பற்றிய செய்திகளுக்கு
வாயே நீ திறவாய்....

மனமே நீ வருந்தாய்.....
எதுவரினும்
எவர் விலக்கலிலும்
மனமே நீ வருந்தாய்.....

உள்ளாற உணர்ந்த மழை
உன்னோடு உறவாட
உன்னோடு இருப்பவரை
ஒருபோதும் கணிக்காதே....

என்னுடல் கொண்ட நிழல்
இருட்டினில் பிரியுமெனில்
என் மனம் கொண்ட நிழல்
சில கருத்தினில் பிரியுமன்றோ......

எனவே மனமே நீ தளராய்........

உயிருருக உடல் கரைய
பிறரைக் காதலித்த
பெருந்தவறு இனி வேண்டாம்
உன்னைக் காதலிக்க
மனமே நீ முயல்வாய்....

பிறந்த உடல்
இறந்து போகும்
பிரிந்த உயிர்
தனியே வாடும்
உடன்வருவோர் எவருமின்றி
கடந்தே ஏகும் காலங்களில்....
கிடந்தே கழியும் நொடிகளில்...
உணர்ந்தே போவாய் மனமே......

நட்பென்றும் காதலென்றும்
நலம் நாடும் உறவென்றும்
நொந்த நிலை இனியும் வேண்டா...
என் மனமே....
பந்த நிலைதானறுத்து
பகுத்தறிவின் விலை தொகுத்து
எந்தன் மனமே ஏகாய் நீ.........

நீயும் ஒரு பெரு நதிதான்....

பெண்ணே......
நீயும் ஒரு பெரு நதிதான்.......


ஊற்றெனப் பொங்கி
அருவியாய் விழும்போது
தாய் மடி தாண்டி
தந்தை தோள் தாவும்
சிறு குழவி....

விழும் அருவி நீரெல்லாம்
ஒன்றாய் கூடி
குளமாய், ஏரியாய்
குழுமும் போது
ஏதுமறியா சிறுமி.....

இருகரை தொட்டு
ஆசை நுரைவிட்டு
சலசலத்து நடக்கையில்
இன்பங்கள் பொங்கும்
அழகான குமரி.....

நதிவழிப்பயணத்தில்
இடர்ப்படும் ஓடைகளை
உள்வாங்கிக் கொண்டு
வீர நடை பயில்வதாய்
வாழ்வின் தடைகளை
வாழ்ந்து கடப்பதில்
இன்றைய புதுமைப்பெண்....

அச்ச மட பயிர்ப்பு நாணங்களை
அணைகளாக்கி
உன் அறிவின் வேகமும்
ஆத்ம தாகமும்
தடுக்கப் படும்போது
நீ குடும்பத் தலைவி....

அணைகளால் தடுக்கப்பட்ட
நதி நீராய்
வாழ்வியலால் சூழப்பட்டு
அவ்வப் போது
அனுமதித்த மதகுகளில்
உன் அன்பின் வெள்ளம்
வடியும் போது
நேசமிகு மனைவி.....

மதகு வழி பாய்ந்தாலும்
பேதங்கள் ஏதுமின்றி
உன் அன்பின் வெள்ளம்
கால்வாய் வழியாய்
சில காய்ந்த நிலங்களையும்
ஈரப்படுத்துமே
அப்போது நீ தாய்......

வளைவுகளின் அழகோடு
வலிவின் அழிவும்
கொண்டவள் நீயெனினும்
அழகுகளின் மறைவிலும்
அன்பின் ஆழங்களிலும்
அழிவுகளை ஒளித்துக் கொண்டாய்
அங்கு நீ தலைவி....

ஆழ்கடல் சேரும் பொது
பெருங்கடலையும்
பின்வாங்கவைத்து
ஊடுறுவும்
திறன் காட்டி
கழிமுகமாகும் போது
யாவுமாகி நின்றாய்...

பெண்ணே நீயும்
ஒரு பெரு நதிதான்....

"தீ"ண்டாமை...................

பக்திக் கடலினில்
படர்ந்துவரும்
வேத அலைகளில்
நுரையாய் இருப்பதுதான்
வர்ணாசிரமம்.......

பிரிவதே வளரும்
என்ற
பேருண்மையின்,
பிரபஞ்ச அடிப்படையில்
வளர்வதற்காய்
பிரிக்கப் பட்டதே
வர்ணாசிரமம்....

என்னைப் பொறுத்தவரை
அது
வருண ஆசிரமம்......

வருணக் கடவுள்
பொழியும் மழையினை
உழவன் வாழ்த்த
நெசவாளி நோக
சலவைத் தொழிலாளி
சபிக்க

இப்படி ஒரே மழை
முரண்பட்டு நிற்பதாய்
ஒரு கொள்கை
பிழை பட்டு கிடக்கிறது.......

வர்ணாசிரம வேர்கள்
பார்ப்பனீயத்தில்
முளைத்து
சாதீயங்களில் கிளைபரப்பி
தீண்டாமையில் பூப்பூத்தது

அது விதையின் குற்றமல்ல....

சாதி என்பது பிறப்பாலமைவதல்ல
ஒருவனின்
வாழ்தலில் விளையும்
வழக்குகளால் அமைவது

அந்தணன் என்பவன் அறவோன்......
இந்த வரிகளில் விளங்குகிறது
பிறப்பால் அமைவதல்ல சாதி

ஆயினும் காலப்போக்குகளில்
சில களைகளின் விளைச்சலில்
மாந்தர்தம் மனதினில்
தூவிய விஷ விதையாய்
முளைத்துப் பரந்து
விரிந்து கிடக்கிறது......

உடலில் நோய் வந்தால்
மருந்து தீர்வு
உறுப்பில் நோய் வந்தால்
அறுவையே தீர்வு
பதிலாக
உடம்பையே வெறுத்தல்
எவ்வித தீர்வு?????

களைகள் சிலவற்றிற்காய்
காடு நிறை வயலையே
கொளுத்துவது
அறிவுள்ளோர்க்கும்
அறமுள்ளோர்க்கும்
அழகல்ல..........

நம் வீட்டு தூசகற்ற
துடைப்பம் தேடலாம்
வீடு மாறவோ
அன்றி
வீடு கொளுத்தவோ
விளையலாமா???

சிந்திப்பீர்
செயல்படுவீர்.......

தீண்டாமை பெருங்குற்றம்
எனில்
ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை
மட்டும்
அவர் சார்ந்த வகுப்பின்
பெயராலேயே
ஒதுக்குவது
உயர்தனித் தீண்டாமை அல்லவா?????

முரண்களிடையே
தவிக்கிறோம்....
முரண்களூடே
முடிவெடுக்கிறோம்....
முரண்பாடாய் நடப்பதை
மட்டும்
முழுமூச்சுடன் செய்கிறோம்......

மேடு பள்ள வேறுபாடு களைய
மேட்டை வெட்டி
பள்ளம் நிறையுங்கள்....
மேட்டை பள்ளமாக்கி
பள்ளத்தை மேடாக்கி
வேறுபாட்டின்
மாறுபாடுகளை
விளைவிக்க முயலாதீர்.......

தீண்டாமை குற்றமெனில்
இதுவும் ஒருவகை
தீண்டாமைதான்........

இழந்த சொர்க்கமே.......

கனவுகளில் கண்டெடுத்த
பாதையொன்றை.....
கவிதைகளால் செப்பனிட்டு
புன்னகைப் பூக்களை
பொழிந்து வைத்தேன்.....

இழந்த சொர்க்கமொன்றின்
இதம் தந்த நினைவுகளின்
மீதத்திற்காய்....
சிற்சில நரகங்கள்
கடந்து வந்தேன்......

ஒற்றை முடி
உடைந்த வளையல்
கற்றைக் கடிதங்கள்
என உனதான எதையும்
ஒளித்து வைக்கவில்லை.....

உதடுதாண்டா புன்னகை
பரிவான மனம்
அன்பான அக்கறை
நேச வாசம் வீசும்
உரையாடல்கள்....

இப்படியாகத்தான்
வெளிப்பட்டது
என் சொர்க்கம்.....

இன்னும்
இன்னும்
என மனம் விரும்பும்
தருணங்களில்
தவிர்க்கப் படுகிறது......

கடமை அழைக்கலாம்
உறவு உறுத்தலாம்
கனவு கைவிடலாம்
நனவு இடித்துரைக்கலாம்
எனினும்......

உனக்கான உன்னுள்
உருவம் பெறா
என் அன்பின்
தவிர்க்கப் பட வேண்டிய
சிலதாய் அன்றி பலதாய்.....

நான் தவிப்பதை
அறிந்தும்
நீ தவிர்க்கலாம்....
பரவாயில்லை....
தவிப்பவனை தவிர்ப்பது
உனக்கு உவப்பே எனில்

நானும்
தவிப்பதை
தவிர்க்கிறேன்......

தவிர்த்தவாறே....
உன்
பார்வைக்
கோட்டுகளிலிருந்து
மறைகிறேன்......

நீயாவது இரு.....
நானில்லா
நிம்மதியோடு......

நானும் இருக்கிறேன்....
இழந்த சொர்க்கமொன்றின்
ஏக்கக் கற்பனையிலும்...
கடந்த பாதையினூடே
களித்த காதலிலும்......

நேசிப்பதைத் தவிர......???????????

எனக்கான பொழுதுகளில்
மலர்ந்திருக்கும் புன்னகை நீ....

எனக்கான கனவுகளில்
உயிர்த்திருக்கும் ஓவியம் நீ....

எனக்கான உறவுகளில்
தனித்திருக்கும் பெருமை நீ.....

எனக்கான பாடல்களில்
ஒலித்திருக்கும் இசையும் நீ....

எனக்கான கவிதைகளில்
இணைந்திருக்கும் பொருளும் நீ....

எனக்கான வெற்றிகளில்
உழைத்திருக்கும் முயற்சி நீ.....

எனக்கான தோல்விகளில்
எனைத்தேற்றும் தோழமை நீ....

எனக்கான இன்பங்களில்
மகிழ்ந்திருக்கும் இதயம் நீ....

எனக்கான பார்வைகளில்
விழுந்திருக்கும் காட்சி நீ....

எனக்கான தேடல்களில்
என்றும் கிடைக்கா அருமை நீ....

எனக்கான காதலில்
எனைத் துரத்தும் நினைவும் நீ....

எல்லாம் எனக்காக
இருக்கும் உனக்காக.....

என்ன செய்ய
தீவிரமாய் உனை இன்னும்

நேசிப்பதைத் தவிர......???????????

மனக்குதிரை..........................



நேசப் புற்களால்
நிரப்பப் பட்டு
காதல் வேலியிட்டு
அடைக்கப்பட்ட
என்
நினைவுகளின் வெளியெங்கும்

அலைந்து திரிந்து
கொண்டே இருக்கிறது
என்
மனக்குதிரை....
உன் நினைவுகளை
சுமந்தவாறே..........

விழி வழி காட்சிகளும்
கனவு வழி நீட்சிகளும்
இல்லாத
இயல்பின் வழிகளில்
கடந்து கிடக்கிறது
என் மனக்குதிரை.....
உனைக் காணும்
உத்வேகத்தோடு..............

என் மனக்குதிரை
விட்டுச் செல்லும்
குழம்படித்
தடங்களிலெல்லாம்
உன் பெயரொன்றே
பொறிக்கப் பட்டிருக்க.......

நீளும் சாலைகள் வழியே
ஓடும் மனக்குதிரை....
தன் கனவுகள் தந்த
கவிதைகளின் கால்களோடு...
கவிதைகள் எழுத வைத்த
உன் காதலின் தாபத்தோடு...

எவ்விதத் தடைகளையும்
எட்டித்தாவும்
என் மனக்குதிரை
உன் மௌனமெனும்
தடைகளிடம் மட்டுமே
மண்டியிட்டு நிற்கிறது.....

உடைத்தெறியும் வலிவுள்ளதுதான்
இருந்தும்...
உனைக்காயப்படுத்தா
காரணத்தோடே
காத்திருக்கிறது.....

உன் நினைவுகளை
மட்டுமே
சுமந்திருக்கும்
இந்த
மனக்குதிரை...
காத்துக் கிடக்கிறது
மாறாத காதலோடும்
நீங்காத நேசத்தோடும்......

விடையில்லா கேள்விகளுக்கு
சொந்தக் காரியே....
பாரதியின் கண்ணம்மாவாய்
எனக்குள் பதியப்பட்ட நீ
என் நினைவுகளை நெய்து
நேசப் பட்டாய் உடுத்திய நீ...

மௌனம் கலைக்கும்
நொடிகளுக்காகவே
காத்திருக்கும்
என் மனக் குதிரை
சுமந்து வரும்
உன் நினைவுகளின்
பாரத்திற்குள்
மறைந்திருக்கும்
நம் நேசத்தை......
மன்னித்தாவது போ..................

ஒற்றைப் பனை....

எனது சோலையில்
எல்லா மலர்களும்
வாசங்களோடும்
வண்ணங்களோடும்
பூத்துக் குலுங்கின…

எனது வானத்தில்
எல்லா நாட்களிலும்
பௌர்ணமிகள்
ஓய்வேயில்லாமல்
ஒளிவீசிக் கொண்டிருந்தன…

அவ்வப்போது
மழைக்கால நேரங்களில்
வந்து போகும்
வானவில் கூட
நிலைத்தே நின்றது…

என் மனமென்னும்
பூமியின் மீது
நட்பெனும் பெருமழை
பெய்துகொண்டே இருந்தது
ஓய்வென்பதே இல்லாமல்…

சோலையில் பாடி
பௌர்ணமி ஒளியிலாடி
நட்பு மழையில்
நனைந்து கொண்டேயிருந்தேன்
விட்டு விட்டு….

அவ்வப்போது மின்னலும்
ஆச்சரிய்மாய் இடிகளும்
நட்பு மழையில்
தென்பட்டாலும்
பாதிக்கவே இல்லை…

இப்படி நீண்ட
கனவுகளோடே
நிறைந்திருந்தன என் இரவுகள்
பிறகுதான் தெரிந்தது
நிஜம் சோலையல்ல பனையென்பது..

கடற்கரையோரப் பனையாய்
என் காத்திருத்தல் நீண்டிருந்தது
வறண்ட ஓலைகளின் சலசலப்பில்
மிரண்டு ஒடின பறவைகள்..
கூடுகளை விட்டு…

பருவங்கள் மாறிப்போகும்..
சூழல்கள் மாறிப்போகும்
ஆனாலும் என்ன
பனையின் தவம்
நீண்டிருக்கும்…..முடிவில்லாமல்……..