வானின் முதல் துளி
அதுவே
மண்ணின் உயிர்த்துளி...
தூறலாய் பெய்து
குழந்தையாய் கொஞ்சும்...
சாரலாய் மாறி
காதலியாய் சிணுங்கும்...
பருவத்தோடு பெய்து
தாயாய் அரவணைக்கும்....
சில சமயம்
அரசனாய் கோபப்படும்
ஆத்திரம் தீர அடிக்கும்
அடை மழை
ஆலங்கட்டி மழை
தட்ப வெட்பத்துக்கேட்ப
பருவ மழை....
புரட்டிப் போடும்
புயல் மழை...
பெய்தும் பெய்யாமலும்
கொடுத்தும் எடுத்தும்
இன்று வரை
அகிலத்தின் ஆணிவேராய்
கடலுக்கும் வானத்துக்கும்
இடையே கைவீசி நடக்கும்....
பருவநிலை சீர்கேடுகளால்
அமில மழை பெய்யுமாம்
அறிந்தவர்கள் சொல்கிறார்கள்...
என்றோ பெய்யும்
அதைப்பற்றி நமக்கென்ன கவலை
சுற்றுப்புறம் சீரழிந்தால் நமக்கென்ன?
நம் சொந்தப்புறம் நன்றாகவே உள்ளது...
முன்னோர் வளர்த்த காடு...
மூளியாகி பெருநகரமானது
நம்மால்...
நம் பிள்ளைகள் அந்த தவறை
மீண்டும் செய்ய முடியாது
ஏனெனில்
நாம்தான் காடுகளே வளர்க்கவில்லையே....
எப்படியாயின் என்ன?
அமில மழை பெய்வதற்குள்
அழி(ந்)த்துவிடுவோம்
மரங்களோடு நாமும்....
அமில மழை பெய்யும் நாளில் மட்டும்
வானின் முதல் துளி
மண்ணின்
கண்ணீர்த்துளி....
No comments:
Post a Comment