ஒரு விடுமுறை நாளின்
முன் மாலை பொழுதில்
ஏதோ தேட நேர்ந்த பொது
எதேச்சையாய் தட்டுப்பட்டது
என் மூன்றாம் வகுப்பின்
பாட நூல் ஓன்று.....
தூசு தட்டி
விரித்து பார்த்தேன்...
அடைசல் வாசனைக்குள்ளிருந்து
நலம் விசாரித்தது...
போலியறியாத என் நட்பின் வாசம்....
துவைக்கும் போதெல்லாம்
அம்மா திட்டும் மேல்சட்டை
தேய்ந்து கிழிந்து
தபால் பெட்டியான கால் சட்டை...
காற்றுக்கு இடமில்லாமல்
புத்தகங்களால் நிரப்பப்பட்ட
கனமான புத்தகப்பை.....
ஒழுகும் மூக்கும்
துடைத்த அடையாளங்களின் மிச்சங்களும்
வழியும் எண்ணையுடன்
அழுத்தி சீவப்பட்ட தலைமுடியும்
ஆனாலும் எது பற்றியும்
பயமோ கவலையோ ஏதுமறியாத
எனக்கே உரித்தான
புன்னகையோடே
பள்ளி சென்ற நாட்கள்....
என் குரல் பெரிதா உன் குரல் பெரிதா
என்னும் குரல் சண்டையில்
உரக்க படித்து உரைத்து படிக்காத
பள்ளிப் பாடங்கள்.....
ஐந்து பைசா ஆரஞ்ச் மிட்டாய்க்கு
ஐந்து பேர் பங்கு போட்டதும்
சட்டை வைத்து காக்காய் கடி போட்டதில்
சட்டை ஒட்டிய துணுக்குகளே
என் பங்கானதும்...
கோள் மூட்டி மூட்டி
நொச்சிகோல் முறிந்ததும்..
குட்டு வாங்கும் பயத்தில்
அக்குளில் வெங்காயம் வைத்து
காய்ச்சல் வர வைத்ததும்....
நான் தட்டிய தூசு
மறைவதற்குள்
ஓடுகிறது நிழற்படமாய்....
ஏக்கத்தோடு.....
No comments:
Post a Comment