Wednesday, November 16, 2011

உன்னை காயப்படுத்தாத என் காதலை.........

நேசித்த பொழுதுகளைப்பற்றி
நான் யோசித்ததே இல்லை
ஆயினும்....
யாசித்த சிலது பற்றி
வாதித்ததைப் பற்றி யோசித்ததுண்டு....

அளவு மீறிய
அன்புதானெனினும்...
வரப்பு மீறிய வெள்ளமாய்
அவ்வப்போது
அத்து மீறியதுண்டு....

அடிப்படை உரிமைகளில்
கூட நான் நுழைகிறேன்..
தவறுதான் என்றாலும்
தவிர்க்க முடியவில்லை....

உண்ணாயா உறங்கினாயா
என்பதோடு நிறுத்தியிருக்க
வேண்டும்தான்....
ஆனாலும்...அதனைத்தாண்டியும்
உன் சுயகௌரவங்களில்
தலையிட்டிருக்கிறேன்......

சுயவிருப்பங்களின் பேரில்
நீ சுடர் தீண்டப் போகும்போது
சுடும் என சொல்லி
தடுத்திருக்கிறேன்....
தவிர்த்திருக்க வேண்டும்தான்....
ஆனாலும் இயலவில்லை.....

எதிர்பார்ப்புகள் அதிகம்தான்
என்ன செய்ய
அவ்வப்போது அறிவு சுட்டினாலும்
உன்னைத்தவிர வேறு
யாரிடம் எதிர்பார்க்க
என்றே சமாதானப்படுத்திக் கொண்டேன்...

புரியாத அல்லது
புரிய விரும்பாத எனக்காக
பாவம் நீயும்தான்
உன் விருப்பங்களை
விலக்கி வைத்து.....
எத்தனை முறைதான் தவிப்பாய்...

சுகங்களை சுருக்கி வைத்து
சோகங்களை பெருக்கி வைத்து
என் அக்கறை
உனக்குத்தான் எத்தனை
அகக் குறைகளை
அளித்திருக்கிறது....

ஆனாலும் நீ...
அமைதியாகத்தான் இருக்கிறாய்...
ஆழ்கடல் கொண்ட நீராய்
உன் காதல் ஆர்ப்பாட்டமில்லாமல்....
கரையோர அலையாய்
என் காதல்..
ஓரிடத்தில் நில்லாமல்....

இப்போதும்
புரிகிறதா என்றால்
தெரியவில்லை பெண்ணே....
அறிவு காதலின் கரையில்
அவகாசமெடுத்து கட்டிய மணல்வீட்டை...
அவசரமாய் கிளம்பி வரும்
என் அக்கறை அலைகள்
அழிக்கவே துடிக்கின்றன.....


யாசித்துக் கொள்கிறேன்
எனக்கு நானே....
அளவு மீறிய அன்பை...
இம்சிக்காத அக்கறையை...
உன்னை காயப்படுத்தாத
என் காதலை....

No comments:

Post a Comment