Wednesday, November 16, 2011

அப்பாவிற்காய் ஒரு வெண்பா.........

ஒரு துளியில் உயிர் தந்தீர் - என் உடல்

வளர்க்க உழைத்தோய்ந்தீர்...

கருவறையில் நான் வளர -என் தாயை

கண்ணிமையில் தாங்கி நின்றீர்...



கால்பதித்த நாள்முதலாய் - என்னை

கண்மணியாய் காத்து வந்தீர்...

நடந்தால் பாதங்கள் நோகுமென்றே - என்னை உம்

தோள்களில் தூக்கிச் சென்றீர்...



அகரங்கள் அறிய வைத்தீர்- என் அறிவில்

ஆறாவதைப் பெருக்க வைத்தீர்...

அன்புதனை ஆறாய்ப் பொழிந்தே - என் உள்ளமதில்

பண்புகளைப் பெருக வைத்தீர்..



வளர்ந்தாலும் அமுது ஊட்டி - எனைச் சிறு

பிள்ளையாய்ப் பேணி வந்தீர்...

தமிழ்தன்னை அறிய வைத்து -என் கிறுக்கல்களே

இதிகாசங்கள் என்றுரைத்து மகிழ்வித்தீர்...



சிங்கக் குட்டியென் றழைத்து - எனைச்

சீராட்டிப் பாராட்டி மகிழ்ந்தீர்..

நோயில் நான் வாட - என் நலனிற்கு

கோவில் கோவிலாய் வேண்டி நின்றீர்...



எல்லாம் தந்த அப்பா- என் வாழ்வில்

எல்லாம் ஆன அப்பா....

பொல்லா விதியினால் போனீரே- என் வாழ்வை

வினாக்குறியாய் வளைத்து விட்டு...



காலன் அவன் கண்ணிலான் - கண் இருந்தால்

தேன் கூட்டின் ராணியை...

திருடிக் கொண்டு போயிருப்பானா? - தேன் கூடு

சிதைந்தொழுக கோரப்பல் தெரிய சிரிப்பானா??



உம்மால் உயிர் பெற்றேன் - உம் அறிவால்

மொழியோடு கவியும் கற்றேன்..

எல்லாம் பெற்று இறுமாந்திருந்திருந்தும் - உம் பிரிவால்

உணர்விழந்து உருக்குலைந்து போய் நின்றேன்..



உம் சுவாசம் சுழன்ற வீடு - அது என்

உயிர் உள்ளவரை வாழும் கூடு...

உம் ஸ்பரிசம் பெற்ற ஆடை - அது என்

வாழ்வில் நான் பெறும் வெற்றிகளின் பொன்னாடை..



இன்று நீர் எம்மோடில்லை - ஒரு உடலாக..

ஆனாலும் என்னுயிரோடிருக்கிறீர்....

எனக்கான உம்கனவை நிறைவேற்ற - என்றும் உம்

அருள் வேண்டும் அது போதும் எனக்கு.....

No comments:

Post a Comment