கனவுகள்....
நிறைவேறாத ஆசைகளின்
நிச்சய வெளிப்பாடுகள்...
நொடிக்கு நொடி மாறும்
மனித மனதின் ஆழம் காணும்
அற்புத மாயக் கண்ணாடிகள்....
விழி திறந்திருந்த போது கண்ட
காட்சிகளின் தாக்கத்தில்
விளையும் பயிர்கள்.....
கறுப்பு வெள்ளையே
என்றாலும் அதனை
வெறுப்பார் எவருமில்லை இப்பாரில்....
இன்பமோ துன்பமோ
ஏதாவதொன்றின் ஏக்கங்களின்
மிச்ச மீதிகளின் சுவடுகள்...
உணமைக்கும் பொய்மைக்கும்
இடையில் ஊசலாடும்
உள்ளத்தின் வெளிப்பாடுகள்....
கனவு காணுங்கள் என்று
கலாம் சொன்னார்
நிச்சயம் நிறைவேறும் என்று...
பகல் கனவு காணாதே என்று
பாட்டி சொன்னாள்
நிச்சயம் பலிக்காதென்று...
இருவரின் கருத்துக்களிலும்
ஏற்பில்லை எனக்கு..
என் கனவுகள் தனிரகம்...
நிறைவேறுமா என்ற சந்தேகமோ
நிறைவேறும் என்ற சந்துஷ்டியோ
ஏதுமில்லை என் கனவுகளுக்கு...
பகலும் இரவும்..
இடமும் பொருளும்
ஏதும் பாதிப்பதில்லை என் கனவுகளை....
கலைஞனின் கனவுகள்
லட்சியப்பாதையில்
கடை விரித்து காசு பார்க்கும்...
கன்னியரின் கனவுகளும்
காளைகளின் கனவுகளும்
நித்தமும் எதையோ எதிர்பார்க்கும்...
ஆனாலும்...
என் கனவுகள் விற்பனைக்கல்ல...
அவை என் இரவுகளுக்கானவை...
இழந்த வாழ்வின்
சுமந்த வலிகளை
மறக்கும் மந்திரங்கள் என் கனவுகள்...
உதிர்வது உறுதி என தெரிந்தும்
மலர்கிறதே பூக்கள்..
அது போலவே என் கனவுகளும்...
பலிக்காதென்று தெரியும்தான்
ஆயினும் கனவுகளுக்கு
பஞ்சமில்லை என் இரவுகளுக்கு...
நினைவுகளில்தான் நிச்சயமில்லை
கனவுகளிலாவது கண்டுகொள்கிறேன்
என் தேவதையின் வருகையினை...
மெல்ல தலை கோதி
நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு
மார்பு தடவி தூங்க வைக்கும் என் தேவதைக் கனவுகள்...
விழித்துப் பார்க்கும் போது
ஞாபகம் இருப்பதில்லை
ஆகவே என் கனவுகள் விற்பனைக்கல்ல........
No comments:
Post a Comment