கனவுகளில் கதையெழுதி
கற்பனையில் மேடையிட்டு
நினைவுகளில் நடித்திருந்தேன்
காதலெனும் நாடகத்தை....
உணர்வுகளால் உரையெழுதி
உவமைகளால் விமர்சித்து
உதடுகளால் பொய்யுரைத்து
உள்ளமதை மறைத்துக் கொண்டாய்....
நிலைதன்னை யோசித்து
நிதர்சனத்தைப் போதித்து
நிஜமிதுதான் என்றே
நீ காட்டிப் போகின்றாய்...
விழியின் வழி நீர் கசிய
விரலின் வழி கவி கசிய
உணர்வின் வலியில் உயிர் கசிய
உண்மைதன்னை ஓதுகின்றாய்.....
உள்ளமது ஓய்ந்திருக்க
உணர்வுகளும் உறைந்திருக்க
உனக்கான காத்திருப்பில் என்
மெய்யொளியும் மெல்லத் தேய.....
கண்ணிழந்த குருடனாய்
அகரமிழந்த தமிழனாய்
பொய்யொளியில் உன்னைத் தேடி
புலம்புகின்றேன் நாளுமிங்கு......
என்று வருவாயோ
எனை மீட்டுத் தருவாயோ -அன்றி
மெல்ல விலகி நின்று
சிறுகச் சிறுக கொல்வாயோ....
ஏதும் அறிகிலேன் நான்
எதுவும் புரிந்திலேன் நான்
உன்னை மட்டும் உணர்ந்ததனால்
வருவாய் என்னவளாய் என்ற
நம்பிக்கையில்
உயிர்த்திருக்கிறேன் நான்................
No comments:
Post a Comment