பாரதி.....
வார்த்தையில் பொறி வைத்து
வாக்கியத்தில் பற்றவைத்து...
கவியெனும் நெருப்பாக்கி...
சுதந்திர வேட்கைக்கு...
சூரியனாய் சுடர்விட்டான்.....
முண்டாசும் முரட்டுமீசையும்
கோப விழிப்பார்வையும்
தனிப்பட்ட அடையாளங்களாய்
அன்றிலிருந்து பதிந்தே போயின...
ஏகாபத்தியம் என்னும்
மூடுபனியின் கீழ்
அனைவரும் புல் நுனிகளாய்
கிடந்தபோது...
பகலவனாய் எரிந்தான் பாரதி....
கவிக்கதிர்கள் ஊடுருவியபோது
மூடுபனிக்கும் வியர்த்தது...
முடங்கிக் கிடந்த
புல் நுனியும் விழித்தது....
இன்று அறிவியல் சாதிப்பதை
அன்றே கவிதைகளில்
போதித்தவன் பாரதி...
கட்டுரைகள் தீட்டியே
பிரிட்டிஷாரை பேதித்தவன் பாரதி...
எட்டயபுரத்தின்
அக்கினிக் குஞ்சு
எட்டுத்திக்கிலும்
சுடர்விட்டெரிய
சுதந்திர தாகமும்
சூறாவளியானது...
காக்கை குருவிக்கும் உறவான கவி
காலனையும் காலால் உதைத்த கவி
கண்ணனைக் காதலனாய்..
குயிலுக்கும் தோழனாய்...
கடவுளையும் கேள்விகளால்
கலங்க வைத்த கவி...
வறுமைக்கும் பகைக்கும்
இடையில் வாடினாலும்
நிமிர்ந்த நடையிலும்
நேர் கொண்ட பார்வையிலும்
சுதந்தர வானில் சிறகடித்த கவி..
வாழ்ந்தது போதுமென்றோ
உடலழித்துப் போனான்....
ஊனழித்துப் போனாலும்
அனைவருக்கும்
உணர்வளித்துப் போனான்...
கவிகளால் கேட்டுச் சலித்ததால்
கடவுளிடம் நேரிடையாக
கேட்கப் போனான்
வாழ்தல் பெரிதில்லை
மாநிலத்தின் மைந்தர்களே..
ஊனழித்தும் உறவழித்தும்
பேர் நிலைத்து பெருவாழ்வில்
திளைத்திருக்க
மானமும் வீரமுமே
மகத்தான சாட்சியென்று
வழியொன்று காட்டிப் போனான்...
பாரோரே...பாரோரே...
பாரதியின் வழிவாழ
பாய்ந்து வாரீர்...
தோல்வியது நிலையில்லை
துன்பமது இறுதியில்லை
வீழ்வதிலும் வாழக்கற்போம்....
வெற்றியதைப் பெற்றிடுவோம்...
நம்பிக்கை கொள்ளுங்கள்...
பாரதியைப் போல.........
No comments:
Post a Comment