Wednesday, November 16, 2011

பாலையில் பூத்த கள்ளி.............

சுடும் வெயிலிலும்

எதுபற்றியும் பற்றில்லாது

கடும் பாறையாய்க்

கிடந்தவன் நான்....



என்மேல் உன் கள்ளமில்லா

காதலைப் பெருமழையாய்

பெய்து பாறையை பொடியாக்கி

மணல்துகளாக்கிவிட்டாய்....



அதன் மீதே

என் நட்பு நந்தவனங்களும்

உறவுச் சோலைகளும்

அமைந்து மகிழ்ந்தன..



இரவும் பகலும்

உனை நினைத்தே

உருகிய என் உணர்வுகள்

வரிகளாய் வடிவம் கொண்டன



உன் உண்மைஅன்பால்

குளிர்ந்த என் காதல்மேகங்கள்

கவிதை மழைகளைப் பொழிந்து மகிழ்ந்தன

என் நந்தவனமெங்கும்.....



இன்றோ அன்பின்றி

வறண்டு கிடக்கின்றன மேகங்கள்

நீரில்லா மேகங்களால்

உன் வரவில்லா என் வனங்களும்.....



இன்று மழையில்லா

நிலமாய்க் கிடக்கிறேன்...

கண்டுகொள்ளாமல்

காற்றாய் கடந்து போகிறாய்....



சரி போ......

காலம் காயங்களை ஆற்றும்

ஆனாலும் காதலை ஆற்றாது...

இந்த மண் மீண்டும் பாறையாகாது....



பதிலாக மழைக்கு ஏங்கியே

பாழாகக் கூடும்....பாலையாகவும் மாறும்...

அன்று எங்காவது ஓரத்தில்

உன் அன்பின் மிச்சங்கள் இருக்கும்.....



அதில் முளைத்த

கள்ளிச் செடிகளில்

உன் பெயர் பொறிக்கப்

பட்டிருக்கும்......



பாலையில் பூத்த கள்ளி

வறண்டு கிடக்கும்

உன் பெயரை சொல்லி.......

வந்து படித்துப் போ...



அன்று நீ கண்ணீர்த்துளிகளை

சிந்தி விடாதே...

பாவம் அந்தக் கள்ளியும்

வறண்டே போகட்டும் விட்டு விடு



ஏனென்றால்

உன்னை எதிர்பார்த்து

வா(ழ்)டுவதை விட

அது மாண்டே விடட்டும்.........

No comments:

Post a Comment