Friday, August 14, 2015

"தீ"ண்டாமை...................

பக்திக் கடலினில்
படர்ந்துவரும்
வேத அலைகளில்
நுரையாய் இருப்பதுதான்
வர்ணாசிரமம்.......

பிரிவதே வளரும்
என்ற
பேருண்மையின்,
பிரபஞ்ச அடிப்படையில்
வளர்வதற்காய்
பிரிக்கப் பட்டதே
வர்ணாசிரமம்....

என்னைப் பொறுத்தவரை
அது
வருண ஆசிரமம்......

வருணக் கடவுள்
பொழியும் மழையினை
உழவன் வாழ்த்த
நெசவாளி நோக
சலவைத் தொழிலாளி
சபிக்க

இப்படி ஒரே மழை
முரண்பட்டு நிற்பதாய்
ஒரு கொள்கை
பிழை பட்டு கிடக்கிறது.......

வர்ணாசிரம வேர்கள்
பார்ப்பனீயத்தில்
முளைத்து
சாதீயங்களில் கிளைபரப்பி
தீண்டாமையில் பூப்பூத்தது

அது விதையின் குற்றமல்ல....

சாதி என்பது பிறப்பாலமைவதல்ல
ஒருவனின்
வாழ்தலில் விளையும்
வழக்குகளால் அமைவது

அந்தணன் என்பவன் அறவோன்......
இந்த வரிகளில் விளங்குகிறது
பிறப்பால் அமைவதல்ல சாதி

ஆயினும் காலப்போக்குகளில்
சில களைகளின் விளைச்சலில்
மாந்தர்தம் மனதினில்
தூவிய விஷ விதையாய்
முளைத்துப் பரந்து
விரிந்து கிடக்கிறது......

உடலில் நோய் வந்தால்
மருந்து தீர்வு
உறுப்பில் நோய் வந்தால்
அறுவையே தீர்வு
பதிலாக
உடம்பையே வெறுத்தல்
எவ்வித தீர்வு?????

களைகள் சிலவற்றிற்காய்
காடு நிறை வயலையே
கொளுத்துவது
அறிவுள்ளோர்க்கும்
அறமுள்ளோர்க்கும்
அழகல்ல..........

நம் வீட்டு தூசகற்ற
துடைப்பம் தேடலாம்
வீடு மாறவோ
அன்றி
வீடு கொளுத்தவோ
விளையலாமா???

சிந்திப்பீர்
செயல்படுவீர்.......

தீண்டாமை பெருங்குற்றம்
எனில்
ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை
மட்டும்
அவர் சார்ந்த வகுப்பின்
பெயராலேயே
ஒதுக்குவது
உயர்தனித் தீண்டாமை அல்லவா?????

முரண்களிடையே
தவிக்கிறோம்....
முரண்களூடே
முடிவெடுக்கிறோம்....
முரண்பாடாய் நடப்பதை
மட்டும்
முழுமூச்சுடன் செய்கிறோம்......

மேடு பள்ள வேறுபாடு களைய
மேட்டை வெட்டி
பள்ளம் நிறையுங்கள்....
மேட்டை பள்ளமாக்கி
பள்ளத்தை மேடாக்கி
வேறுபாட்டின்
மாறுபாடுகளை
விளைவிக்க முயலாதீர்.......

தீண்டாமை குற்றமெனில்
இதுவும் ஒருவகை
தீண்டாமைதான்........

No comments:

Post a Comment