Tuesday, June 15, 2010

பட்டாம் பூச்சி...........

காலங்காலமாய்
கனவுகளை கடைந்து...
நினைவுகளில் வடிகட்டி...
வயதுக்கும் வார்த்தைக்கும்
சம்பந்தமேயில்லாமல்..
நான் கோர்த்த
நட்பெனும் மலர்களே.........

கூட்டுப்புழுவாய்
இருந்தவனை
வண்ணத்துப் பூச்சியாய்
பறக்க வைத்தீர்.....

கூடு கிழித்து...
உற்சாகத்துடன்
பறந்து திரிந்தது
இந்த பட்டாம் பூச்சி....
மலர்களின் மீது பறந்திருந்த
வண்ணமே பாடித் திரிந்தது...

ஒரு சில மலர்கள்..
நான் பறக்கும் போது
என் சிறகுதிர்க்கும்
வண்ணங்களினால்..
தங்கள் வண்ணம் வாடுதென
வருத்தப்படுகின்றன....

பிறந்த காலையிலிருந்து
இந்த வனமொன்றே..
நந்த வனமென்றும்..
என் சொந்த வனமென்றும்
கருதிக்களித்த பட்டாம்பூச்சி...

சொந்தமென்று எதுவுமில்லை..
உறவொன்றும் நிலையில்லை..
வண்ணமது நீங்கிவிட்டால்
வண்ணத்துப் பூச்சிக்கு
மதிப்பில்லை...
என காலம் தாழ்த்தியே
கருத்தில் கொண்டது.....

சிறிது காலமாய்
வண்ணங்களை மட்டுமே..
வாரியிறைத்துக் கொண்டிருந்த
வண்ணத்துப் பூச்சி
முதல் முறையாய்
எண்ணங்களையும்
ஏறெடுக்கிறது.......

எல்லைகளற்ற சிறகுகளை
இதமாய் விரித்துப்
பறந்திருந்த பட்டாம்பூச்சி..
சிறகுகளை மடக்கிக்கொள்கிறது...
ஒற்றை நாள் உயிரிதானே...
வேறு நந்த வனம் தேடாது...

கூட்டுப்புழுவாக இயலாது
எனினும்..
உடைத்த கூட்டுக்குள்
ஒளிந்தாவது கொள்ளும்...
வண்ணங்கள் தந்த வாசமலர்களை
எண்ணங்களில் இருத்தியபடி......

No comments:

Post a Comment