Tuesday, June 15, 2010

நீ + நான் = நட்பு......

நான் சகுனியுமில்லை
நீ தர்மனும் இல்லை
நட்பு சதுரங்கத்தில்
நம்மை வைத்து சூதாட.........

உன்னோடு தேவர்கள் இருக்கலாம்
என்னோடு அசுரர்கள் இருக்கலாம்
ஆனாலும் நீ வாமனனும் இல்லை
நான் மாவலியும் இல்லை
என்னிடம் நீ கேட்டு
நான் தர................

நான் கர்ணனும் இல்லை
நீ துரியோதனனும் இல்லை
அங்க தேசத்தை நீ தரவும்
செஞ்சோற்று கடன் நான் தீர்க்கவும்...........

இருவரும் சாதாரண
மனிதர்கள் மட்டுமே.......
உணர்வுச் சுழல்களில்
உழல்பவர்கள் தானே.......

வெறுப்பது மனித குணம்
பொறுப்பது தேவ குணம்
விரும்புவது தெய்வ குணம்
இருந்தாலும்
நாம் மனிதர்கள்தானே........

நான் தேவனாகவுமில்லை
நீ தெய்வமாகவுமில்லை
என்றாலும்…
நண்பர்களாக இருக்கிறோம்…

வாய் தவறிய
வாரத்தைகளுக்கு
வருத்தம் தெரிவித்துக் கொள்வோம்
வழி மாறிய பாதையினை
செப்பனிட்டுக் கொள்வோம்…

கொள்கைகள் வேறுபடலாம்
குணங்களும் மாறுபடலாம்
இருந்து விட்டுப் போகட்டுமே…
நண்பர்கள்தானே…
நட்போடிருக்கலாம்…

உனதும் எனதுமான
ஒவ்வாத கொள்கைகளை
ஓரங்கட்டுவோம்…
நட்பாய் புன்னகைத்து..
நட்பாய் அரவணைத்து…
நட்பை புனரமைப்போம்…
நாளை நமதே என்ற நம்பிக்கையுடன்….

நட்பு(?)க்கு...............

வருத்தப்படுகிறாயா..???
பரவாயில்லை…
வெறுத்தே விடுவாயா???
தவறொன்றுமில்லை…

நகுதல் மட்டுமே
நட்பில்லை..
தேவையெனில்
நாணுதலும் தான்….

உள்ளத்தில் விகாரமாய்
ஒளித்து வைக்கவில்லை…
உதட்டுவழி நிதானமின்றி
உரைத்திடவுமில்லை…

மரபு விதி மாறாமல்
குறிப்புணர்த்தினேன்…
நமது நிலை தாழாமல்
வலியுறுத்தினேன்…

கருத்து வழி யுத்தங்களும்..
கவிதை வழிச் சண்டைகளும்..
சபையொன்றில்
சர்வசாதாரணமானவை..

பிஞ்சு நடை பிறழல்கள்
வழமையானவையெனினும்
காலடிகள் கவனமென்ற
கருத்துணர்த்தினேன்….

நெடுந்தொலைவுப் பயணத்தின்
நிலைவாசலில் நிற்கிறோம்..
வழிகளில் பழி வரலாம்..
வாசலில் வரலாமா?????

வருத்திக் கொள்ள
சொல்லவில்லை…
திருத்திக் கொள்ளவே
சொன்னேன்……

Wednesday, May 5, 2010

தழும்புகள்.......

உணர்வுகளின் வேகத்தில்
உரையாடும் உறவுகளுக்கு..
வரலாறாய் வாழ்ந்த
தலைவர்கள்
தங்களின் தவறுகளுக்கு
தடயங்களை விட்டு செல்வதில்லை
ஆனால்
தழும்புகளை விட்டு செல்கிறார்கள்…..

தடயம் தவிர்த்த
தழும்புகள்..
வருட்த்திற்கொருமுறை
வடிவங்கள் மாற்றிக்கொள்ளும்
ஆனாலும்
வலிகளை மீட்டிச்செல்லும்……

கனத்த போர்வையினை
கண் மீது கட்டிக்கொண்டு
இருட்டென கூறாதீர்…
யாரும் இங்கு நல்லவரில்லை..
யாரும் இங்கு தீயவரில்லை….

அரசியலில்
உணர்வுகளின் நிலையைவிட
அறிவுகளின் நிலைதான்
ஆட்சி செய்கிறது….
ஏனெனில் உணர்வுள்ளவன்
தொண்டனாகிறான்…
அறிவுள்ளவன் தலைவனாகிறான்…

உணர்ச்சிவசப்படும்போது
தன்னிலை மறத்தலியல்பு…
எனினும் தன்னிலை மறந்த
வார்த்தைகள்..முன்னிலும்
நிலையை மோசமாக்கும்…
"யாகாவாராயினும் நாகாக்க…"

வாள்முனையின் காயத்தை விட
வார்த்தைகளின் காயங்கள் வலிவானவை
அழியாத தழும்புகளை
அடையாளமாய் விட்டுச்செல்லும்..
கவனம்…
வாழ்வில் மட்டுமல்ல
வார்த்தகளிலும்தான்….