Friday, August 14, 2015

நீயும் ஒரு பெரு நதிதான்....

பெண்ணே......
நீயும் ஒரு பெரு நதிதான்.......


ஊற்றெனப் பொங்கி
அருவியாய் விழும்போது
தாய் மடி தாண்டி
தந்தை தோள் தாவும்
சிறு குழவி....

விழும் அருவி நீரெல்லாம்
ஒன்றாய் கூடி
குளமாய், ஏரியாய்
குழுமும் போது
ஏதுமறியா சிறுமி.....

இருகரை தொட்டு
ஆசை நுரைவிட்டு
சலசலத்து நடக்கையில்
இன்பங்கள் பொங்கும்
அழகான குமரி.....

நதிவழிப்பயணத்தில்
இடர்ப்படும் ஓடைகளை
உள்வாங்கிக் கொண்டு
வீர நடை பயில்வதாய்
வாழ்வின் தடைகளை
வாழ்ந்து கடப்பதில்
இன்றைய புதுமைப்பெண்....

அச்ச மட பயிர்ப்பு நாணங்களை
அணைகளாக்கி
உன் அறிவின் வேகமும்
ஆத்ம தாகமும்
தடுக்கப் படும்போது
நீ குடும்பத் தலைவி....

அணைகளால் தடுக்கப்பட்ட
நதி நீராய்
வாழ்வியலால் சூழப்பட்டு
அவ்வப் போது
அனுமதித்த மதகுகளில்
உன் அன்பின் வெள்ளம்
வடியும் போது
நேசமிகு மனைவி.....

மதகு வழி பாய்ந்தாலும்
பேதங்கள் ஏதுமின்றி
உன் அன்பின் வெள்ளம்
கால்வாய் வழியாய்
சில காய்ந்த நிலங்களையும்
ஈரப்படுத்துமே
அப்போது நீ தாய்......

வளைவுகளின் அழகோடு
வலிவின் அழிவும்
கொண்டவள் நீயெனினும்
அழகுகளின் மறைவிலும்
அன்பின் ஆழங்களிலும்
அழிவுகளை ஒளித்துக் கொண்டாய்
அங்கு நீ தலைவி....

ஆழ்கடல் சேரும் பொது
பெருங்கடலையும்
பின்வாங்கவைத்து
ஊடுறுவும்
திறன் காட்டி
கழிமுகமாகும் போது
யாவுமாகி நின்றாய்...

பெண்ணே நீயும்
ஒரு பெரு நதிதான்....

No comments:

Post a Comment