Tuesday, March 23, 2010

இழந்தது மனிதம் மட்டும்.....

காக்கை இட்ட எச்சமாய்
கவனிப்பாரற்று கிடக்கிறது மனிதம்....

சிதறி கிடக்கும் பிணக்குவியலில்
உறைந்த ரத்தத்தின்
ஒவ்வொரு துளியிலும்
விரவிக்கிடக்கிறது
பகையின் வீச்சம்...

கடந்து போகும் காற்று கூட
கண்ணீர் விடுகிறது....
மனிதத்தின் நிலையை எண்ணி....

மகரந்தம் சொரியும்
மலர்கள் கூட கந்தகபுகையால்
கருகி கிடக்கின்றன..........

இறந்த உயிர்களின்
திறந்த கண்களூடே
நிறைந்து கிடக்கிறது
எதிர்கால ஏக்கங்கள்....

கடந்த நொடிகளில் நடந்தவை கண்டு
மௌனித்து போன சுற்றுப்புறத்தை
ஊடறுக்கிறது ஓர் ஓலக்குரல்..

இழந்ததும் அடைந்ததுமாய்
எண்ணிப்பார்க்கையில்
அடைந்தது எதுவுமில்லை.....
இழந்தது மனிதம் மட்டும்.....

என் நட்பின் வாசம்....

ஒரு விடுமுறை நாளின்
முன் மாலை பொழுதில்
ஏதோ தேட நேர்ந்த பொது
எதேச்சையாய் தட்டுப்பட்டது
என் மூன்றாம் வகுப்பின்
பாட நூல் ஓன்று.....

தூசு தட்டி
விரித்து பார்த்தேன்...
அடைசல் வாசனைக்குள்ளிருந்து
நலம் விசாரித்தது...
போலியறியாத என் நட்பின் வாசம்....

துவைக்கும் போதெல்லாம்
அம்மா திட்டும் மேல்சட்டை
தேய்ந்து கிழிந்து
தபால் பெட்டியான கால் சட்டை...
காற்றுக்கு இடமில்லாமல்
புத்தகங்களால் நிரப்பப்பட்ட
கனமான புத்தகப்பை.....

ஒழுகும் மூக்கும்
துடைத்த அடையாளங்களின் மிச்சங்களும்
வழியும் எண்ணையுடன்
அழுத்தி சீவப்பட்ட தலைமுடியும்
ஆனாலும் எது பற்றியும்
பயமோ கவலையோ ஏதுமறியாத
எனக்கே உரித்தான
புன்னகையோடே
பள்ளி சென்ற நாட்கள்....

என் குரல் பெரிதா உன் குரல் பெரிதா
என்னும் குரல் சண்டையில்
உரக்க படித்து உரைத்து படிக்காத
பள்ளிப் பாடங்கள்.....

ஐந்து பைசா ஆரஞ்ச் மிட்டாய்க்கு
ஐந்து பேர் பங்கு போட்டதும்
சட்டை வைத்து காக்காய் கடி போட்டதில்
சட்டை ஒட்டிய துணுக்குகளே
என் பங்கானதும்...

கோள் மூட்டி மூட்டி
நொச்சிகோல் முறிந்ததும்..
குட்டு வாங்கும் பயத்தில்
அக்குளில் வெங்காயம் வைத்து
காய்ச்சல் வர வைத்ததும்....

நான் தட்டிய தூசு
மறைவதற்குள்
ஓடுகிறது நிழற்படமாய்....
ஏக்கத்தோடு.....

என்றாவது ஓர் நாள்.............

என் கண் வழியே வழிவது
கண்ணீர் அல்ல பெண்ணே.......
உன் மீதான என்
அளவில்லா காதல்..........

ஓராயிரம் புன்னகைகள்...
ஓராயிரம் வார்த்தைகள்...
ஓராயிரம் பரிசுகள்...
இவை யாவும் உணர்த்தவில்லை.....

ஒற்றை கண்ணீர் துளியே
முழுதாய் உணர்த்தியது
என்னுள் இருக்கும் உன்னையும்
உன் மீதான என் காதலையும்.....

உன்னை பற்றி மட்டுமே
சிந்திக்கிறது மனம்
கடிவாளம் இட்ட
குதிரையாய்.....

உன்னை புரிந்த
என் இதயத்திற்கு
உன் சூழ்நிலை புரியவில்லை...
சொன்னாலும் கேட்கவில்லை....

காயங்களை கீறி
அதில் தெறிக்கும்
வலிகளை...கண்ணீரை ..
ரசிக்கிறது மனம்.......

என் செடியின்
வண்ண ரோஜா நீ
என் முட்கள் உன்னை காயப்படுத்தவே
முனைப்பாய் இருக்கின்றன........

தாயின் கருவறை...
இறுதியின் கல்லறை
இரண்டுக்கும் இடையே
உன் இதய அறை......

நினைவு வேலியிட்டு
அடை காத்து வா....
என் காதலை......

என்றாவது ஓர் நாள்

பொரிக்க கூடும்
என் காதலும் கனவுகளும்
கலந்த
என் கவிதை குஞ்சுகள்......

என் இதயத்தை
கண்ணீரால் கழுவி
கவிதைகளால்
அலங்கரித்து

காதலால் பூஜிக்கிறேன்
நீ அதில்
இருப்பதால்