Wednesday, December 9, 2009

காதல்
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத போதும்
காலம் காலமாய்
கவிதைகளின் கருப்பொருளாய்
கனவுகளின் மெய்ப்பொருளாய்
உணர்வுகளின் உருவகமாய்
உயிர்களுக்குள்ளே
உறவாடிக்கொண்டிருக்கிறது......

மண் மீது இருந்தாலும்
மண்ணோடு விண் தாண்டி
பிரபஞ்சத்தின் எல்லையையும் தாண்டி
பிரவேசிக்கும் வல்லமை
காதலுக்கு மட்டுமே உண்டு.....

இது கடவுளும் அல்ல
ஏனெனில் கடவுள்
அனைவருக்குள்ளும் தோன்றுவதில்லை
இது உணர்வும் அல்ல
ஏனெனில் ஒரு சில மணித்துளிகளில்
ஒய்வு பெற்றுவிட.....

இது வாழ்வும் அல்ல
ஏனெனில் நமக்கான காதல்
என்னோடோ உன்னோடோ
முற்றுப்பெறுவதற்கு
காலம் கடந்தபின்னும்
வாழ்கிறதே சில காதல்கள்......

பின் காதல் என்றால்தான் என்ன?
யோகிக்கு கடவுள்
போகிக்கு காதல்
ரோகிக்கு காமம்
பாவிக்கு பாவம்
இதுதான் காதல்.....

என்றாலும்
இதுவே முற்றான
முடிவும் அல்ல....
எனவே
தேடுவேன் காதலை
எனக்கான வாழ்வின் எல்லை வரைக்கும்..................

Monday, November 16, 2009

நான் சகுனியுமில்லை
நீ தர்மனும் இல்லை
நட்பு சதுரங்கத்தில்
நம்மை வைத்து சூதாட.........

உன்னோடு தேவர்கள் இருக்கலாம்
என்னோடு அசுரர்கள் இருக்கலாம்
ஆனாலும் நீ வாமனனும் இல்லை
நான் மாவலியும் இல்லை
என்னிடம் நீ கேட்டு
நான் தர................

நான் கர்ணனும் இல்லை
நீ துரியோதனனும் இல்லை
அங்க தேசத்தை நீ தரவும்
செஞ்சோற்று கடன் நான் தீர்க்கவும்...........

இருவரும் சாதாரண
மனிதர்கள் மட்டுமே.......
உணர்வுச் சுழல்களில்
உழல்பவர்கள் தானே.......

வெறுப்பது மனித குணம்
பொறுப்பது தேவ குணம்
விரும்புவது தெய்வ குணம்
இருந்தாலும்
நாம் மனிதர்கள்தானே........

நான் தேவனாகவுமில்லை
நீ தெய்வமாகவுமில்லை
எனவே
பிரிவோம் தோழமையே
வெறுப்பெனும் நிழலோடு..
மலர் மலரும் என்றுதான்
மனம் நினைத்தது.......
உதிரும் என்று யார்
எதிர் பார்த்தது........
வான் கடந்து
வெளி கடந்து
தொடரும் நட்பென்றுதான்
நான் நினைத்தேன்....
முகம் கடந்து
மொழி கடந்து
இதயம் தொடும் என்றுதான்
எதிர் பார்த்தேன்....
வலி கொடுத்து
சிறகொடித்து
நீ ரசிக்க நான் நொந்தேன்.......
நிலவின் நீங்காத கரையாய்
மனதின் ஆறாத வடுவாய்
மாறிப்போனதே நட்பு..........
புரிதல் எளிதல்ல
புரிந்தபின் பிரிதலும் எளிதல்ல.......
வரமாய் தேடிய நட்பு
சாபமாய் மாறிய
நிமிடங்களே
நான் இறக்கும் வரையிலும்
இறக்க முடியா சுமையாய்
இதயத்தில் இடம் பிடித்திருக்கும்...
இந்நாள் வரையிலும்
இதம் கொடுத்த
தோழமைக்கும்
இன்று
இனம் காணா பிரிவினைக்கும்
என் நன்றிகள்
போகிறேன் வணக்கம்........