Monday, November 16, 2009

நான் சகுனியுமில்லை
நீ தர்மனும் இல்லை
நட்பு சதுரங்கத்தில்
நம்மை வைத்து சூதாட.........

உன்னோடு தேவர்கள் இருக்கலாம்
என்னோடு அசுரர்கள் இருக்கலாம்
ஆனாலும் நீ வாமனனும் இல்லை
நான் மாவலியும் இல்லை
என்னிடம் நீ கேட்டு
நான் தர................

நான் கர்ணனும் இல்லை
நீ துரியோதனனும் இல்லை
அங்க தேசத்தை நீ தரவும்
செஞ்சோற்று கடன் நான் தீர்க்கவும்...........

இருவரும் சாதாரண
மனிதர்கள் மட்டுமே.......
உணர்வுச் சுழல்களில்
உழல்பவர்கள் தானே.......

வெறுப்பது மனித குணம்
பொறுப்பது தேவ குணம்
விரும்புவது தெய்வ குணம்
இருந்தாலும்
நாம் மனிதர்கள்தானே........

நான் தேவனாகவுமில்லை
நீ தெய்வமாகவுமில்லை
எனவே
பிரிவோம் தோழமையே
வெறுப்பெனும் நிழலோடு..
மலர் மலரும் என்றுதான்
மனம் நினைத்தது.......
உதிரும் என்று யார்
எதிர் பார்த்தது........
வான் கடந்து
வெளி கடந்து
தொடரும் நட்பென்றுதான்
நான் நினைத்தேன்....
முகம் கடந்து
மொழி கடந்து
இதயம் தொடும் என்றுதான்
எதிர் பார்த்தேன்....
வலி கொடுத்து
சிறகொடித்து
நீ ரசிக்க நான் நொந்தேன்.......
நிலவின் நீங்காத கரையாய்
மனதின் ஆறாத வடுவாய்
மாறிப்போனதே நட்பு..........
புரிதல் எளிதல்ல
புரிந்தபின் பிரிதலும் எளிதல்ல.......
வரமாய் தேடிய நட்பு
சாபமாய் மாறிய
நிமிடங்களே
நான் இறக்கும் வரையிலும்
இறக்க முடியா சுமையாய்
இதயத்தில் இடம் பிடித்திருக்கும்...
இந்நாள் வரையிலும்
இதம் கொடுத்த
தோழமைக்கும்
இன்று
இனம் காணா பிரிவினைக்கும்
என் நன்றிகள்
போகிறேன் வணக்கம்........
உண்ண உணவுண்டு
உறங்க வீடுண்டு
வீண் கதைகள் பேசி
வில்லங்க சண்டையிட
வீடு தோறும் திண்ணையுண்டு

எண்ணம் பலவுண்டு
உண்டு களித்தே
உறங்கி கிடந்தாலும்
வானேறி நிலா தாண்டி
விண்ணாள ஆசையுண்டு

சோம்பேறியானாலும்
சுக வாழ்வு வாழ
குறுக்கு வழி சூத்திரங்கள்
கொண்டிருக்கும் சாத்திரங்கள்
தேடும் ஆசை உண்டு

நல் வழி போய்
நாயினும் கீழாய்
அல்லும் பகலும்
அலைந்தே திரிந்தாலும்
கிட்டுமா வெற்றி ?????

கேட்கின்ற இளைஞனுக்கு
கூறும் விடை தெரியாமல்
குழம்புகின்றேன் நான்
விடை தேடி போகிறேன்
கிடைத்தால் திரும்புவேன்

அதுவரை பொறுத்திருப்பீர்
ஆனவரை காத்திருப்பீர்
மண் கொண்டு மூடி விண்தாண்டி வீசினாலும்
உண்மை ஒருநாள் உறக்கம் விழிக்கும்
இவ்வுலகை ஜெயிக்கும்.................