Friday, August 14, 2015

நேசிப்பதைத் தவிர......???????????

எனக்கான பொழுதுகளில்
மலர்ந்திருக்கும் புன்னகை நீ....

எனக்கான கனவுகளில்
உயிர்த்திருக்கும் ஓவியம் நீ....

எனக்கான உறவுகளில்
தனித்திருக்கும் பெருமை நீ.....

எனக்கான பாடல்களில்
ஒலித்திருக்கும் இசையும் நீ....

எனக்கான கவிதைகளில்
இணைந்திருக்கும் பொருளும் நீ....

எனக்கான வெற்றிகளில்
உழைத்திருக்கும் முயற்சி நீ.....

எனக்கான தோல்விகளில்
எனைத்தேற்றும் தோழமை நீ....

எனக்கான இன்பங்களில்
மகிழ்ந்திருக்கும் இதயம் நீ....

எனக்கான பார்வைகளில்
விழுந்திருக்கும் காட்சி நீ....

எனக்கான தேடல்களில்
என்றும் கிடைக்கா அருமை நீ....

எனக்கான காதலில்
எனைத் துரத்தும் நினைவும் நீ....

எல்லாம் எனக்காக
இருக்கும் உனக்காக.....

என்ன செய்ய
தீவிரமாய் உனை இன்னும்

நேசிப்பதைத் தவிர......???????????

மனக்குதிரை..........................



நேசப் புற்களால்
நிரப்பப் பட்டு
காதல் வேலியிட்டு
அடைக்கப்பட்ட
என்
நினைவுகளின் வெளியெங்கும்

அலைந்து திரிந்து
கொண்டே இருக்கிறது
என்
மனக்குதிரை....
உன் நினைவுகளை
சுமந்தவாறே..........

விழி வழி காட்சிகளும்
கனவு வழி நீட்சிகளும்
இல்லாத
இயல்பின் வழிகளில்
கடந்து கிடக்கிறது
என் மனக்குதிரை.....
உனைக் காணும்
உத்வேகத்தோடு..............

என் மனக்குதிரை
விட்டுச் செல்லும்
குழம்படித்
தடங்களிலெல்லாம்
உன் பெயரொன்றே
பொறிக்கப் பட்டிருக்க.......

நீளும் சாலைகள் வழியே
ஓடும் மனக்குதிரை....
தன் கனவுகள் தந்த
கவிதைகளின் கால்களோடு...
கவிதைகள் எழுத வைத்த
உன் காதலின் தாபத்தோடு...

எவ்விதத் தடைகளையும்
எட்டித்தாவும்
என் மனக்குதிரை
உன் மௌனமெனும்
தடைகளிடம் மட்டுமே
மண்டியிட்டு நிற்கிறது.....

உடைத்தெறியும் வலிவுள்ளதுதான்
இருந்தும்...
உனைக்காயப்படுத்தா
காரணத்தோடே
காத்திருக்கிறது.....

உன் நினைவுகளை
மட்டுமே
சுமந்திருக்கும்
இந்த
மனக்குதிரை...
காத்துக் கிடக்கிறது
மாறாத காதலோடும்
நீங்காத நேசத்தோடும்......

விடையில்லா கேள்விகளுக்கு
சொந்தக் காரியே....
பாரதியின் கண்ணம்மாவாய்
எனக்குள் பதியப்பட்ட நீ
என் நினைவுகளை நெய்து
நேசப் பட்டாய் உடுத்திய நீ...

மௌனம் கலைக்கும்
நொடிகளுக்காகவே
காத்திருக்கும்
என் மனக் குதிரை
சுமந்து வரும்
உன் நினைவுகளின்
பாரத்திற்குள்
மறைந்திருக்கும்
நம் நேசத்தை......
மன்னித்தாவது போ..................

ஒற்றைப் பனை....

எனது சோலையில்
எல்லா மலர்களும்
வாசங்களோடும்
வண்ணங்களோடும்
பூத்துக் குலுங்கின…

எனது வானத்தில்
எல்லா நாட்களிலும்
பௌர்ணமிகள்
ஓய்வேயில்லாமல்
ஒளிவீசிக் கொண்டிருந்தன…

அவ்வப்போது
மழைக்கால நேரங்களில்
வந்து போகும்
வானவில் கூட
நிலைத்தே நின்றது…

என் மனமென்னும்
பூமியின் மீது
நட்பெனும் பெருமழை
பெய்துகொண்டே இருந்தது
ஓய்வென்பதே இல்லாமல்…

சோலையில் பாடி
பௌர்ணமி ஒளியிலாடி
நட்பு மழையில்
நனைந்து கொண்டேயிருந்தேன்
விட்டு விட்டு….

அவ்வப்போது மின்னலும்
ஆச்சரிய்மாய் இடிகளும்
நட்பு மழையில்
தென்பட்டாலும்
பாதிக்கவே இல்லை…

இப்படி நீண்ட
கனவுகளோடே
நிறைந்திருந்தன என் இரவுகள்
பிறகுதான் தெரிந்தது
நிஜம் சோலையல்ல பனையென்பது..

கடற்கரையோரப் பனையாய்
என் காத்திருத்தல் நீண்டிருந்தது
வறண்ட ஓலைகளின் சலசலப்பில்
மிரண்டு ஒடின பறவைகள்..
கூடுகளை விட்டு…

பருவங்கள் மாறிப்போகும்..
சூழல்கள் மாறிப்போகும்
ஆனாலும் என்ன
பனையின் தவம்
நீண்டிருக்கும்…..முடிவில்லாமல்……..