Wednesday, November 16, 2011

என் நந்தவனப்பூக்கள்..............

அர்த்தமில்லா

வார்த்தைகளுக்குப்

பொருள் தேடியே

தொலைந்து போய்க்

கொண்டிருக்கின்றன

நொடிகளாய் ஆயுள்கள்.....



நிலைக்கண்ணாடியின்

பிம்பங்களாய்

நேரெதிராகவே நிகழ்கின்றன

முயற்சிகளால் விளையும்

நம்பிக்கையின்

விருட்சங்கள்.......



அழகிருந்தும் மணமில்லா

கனகாம்பரப் பூக்களாகவே..

முகம் மலர்ந்தும்

அகம் மறைத்துக் கிடக்கின்றன

என் நட்பு நந்தவனத்தின்

ஒரு சில பூக்கள்.....



தொலை நோக்குப்

பார்வையிகளிடையே

குறை நோக்கும் பார்வைகளால்

குறுகுறுத்து

பின் வாங்கும்

என் நட்புத் தென்றல்.....



வாடாமலிருக்க வேண்டும்தான்

அதற்காக என் நந்தவனத்தில்

செயற்கைப் பூக்கள் வேண்டாம்

இயற்கையில் வாசத்தோடு

மணித்துளிகளில் வாடினாலும்

அ(ன்பு)ப்பூக்களே வேண்டும..........



என் நந்தவனம்

கணக்கற்ற வாசமில்லா பூக்களால்

நிறைந்திருப்பதை விட

ஒரு சில பூக்களின் வாசங்களால்

நிறைந்திருந்தாலே

போதுமெனக்கு....



எண்ணிக்கையளவுகளில்

நம்பிக்கையில்லை எனக்கு

எண்ணங்களினளவில்

நம்பிக்கையெனக்கு....

தலைக்குச் சூடும் பூக்களைவிட

இறைக்குச் சூடும் பூக்களே

போதுமெனக்கு.....



ஏனெனில்

என் நந்தவனப்பூக்கள்

ரசிப்பதற்கும் பறிப்பதற்குமல்ல

அவை மதிப்பதற்கும்

துதிப்பதற்குமே.............

உயிர்த்திருக்கிறேன் நான்........

கனவுகளில் கதையெழுதி

கற்பனையில் மேடையிட்டு

நினைவுகளில் நடித்திருந்தேன்

காதலெனும் நாடகத்தை....



உணர்வுகளால் உரையெழுதி

உவமைகளால் விமர்சித்து

உதடுகளால் பொய்யுரைத்து

உள்ளமதை மறைத்துக் கொண்டாய்....



நிலைதன்னை யோசித்து

நிதர்சனத்தைப் போதித்து

நிஜமிதுதான் என்றே

நீ காட்டிப் போகின்றாய்...



விழியின் வழி நீர் கசிய

விரலின் வழி கவி கசிய

உணர்வின் வலியில் உயிர் கசிய

உண்மைதன்னை ஓதுகின்றாய்.....



உள்ளமது ஓய்ந்திருக்க

உணர்வுகளும் உறைந்திருக்க

உனக்கான காத்திருப்பில் என்

மெய்யொளியும் மெல்லத் தேய.....



கண்ணிழந்த குருடனாய்

அகரமிழந்த தமிழனாய்

பொய்யொளியில் உன்னைத் தேடி

புலம்புகின்றேன் நாளுமிங்கு......



என்று வருவாயோ

எனை மீட்டுத் தருவாயோ -அன்றி

மெல்ல விலகி நின்று

சிறுகச் சிறுக கொல்வாயோ....



ஏதும் அறிகிலேன் நான்

எதுவும் புரிந்திலேன் நான்

உன்னை மட்டும் உணர்ந்ததனால்

வருவாய் என்னவளாய் என்ற

நம்பிக்கையில்

உயிர்த்திருக்கிறேன் நான்................

பாலையில் பூத்த கள்ளி.............

சுடும் வெயிலிலும்

எதுபற்றியும் பற்றில்லாது

கடும் பாறையாய்க்

கிடந்தவன் நான்....



என்மேல் உன் கள்ளமில்லா

காதலைப் பெருமழையாய்

பெய்து பாறையை பொடியாக்கி

மணல்துகளாக்கிவிட்டாய்....



அதன் மீதே

என் நட்பு நந்தவனங்களும்

உறவுச் சோலைகளும்

அமைந்து மகிழ்ந்தன..



இரவும் பகலும்

உனை நினைத்தே

உருகிய என் உணர்வுகள்

வரிகளாய் வடிவம் கொண்டன



உன் உண்மைஅன்பால்

குளிர்ந்த என் காதல்மேகங்கள்

கவிதை மழைகளைப் பொழிந்து மகிழ்ந்தன

என் நந்தவனமெங்கும்.....



இன்றோ அன்பின்றி

வறண்டு கிடக்கின்றன மேகங்கள்

நீரில்லா மேகங்களால்

உன் வரவில்லா என் வனங்களும்.....



இன்று மழையில்லா

நிலமாய்க் கிடக்கிறேன்...

கண்டுகொள்ளாமல்

காற்றாய் கடந்து போகிறாய்....



சரி போ......

காலம் காயங்களை ஆற்றும்

ஆனாலும் காதலை ஆற்றாது...

இந்த மண் மீண்டும் பாறையாகாது....



பதிலாக மழைக்கு ஏங்கியே

பாழாகக் கூடும்....பாலையாகவும் மாறும்...

அன்று எங்காவது ஓரத்தில்

உன் அன்பின் மிச்சங்கள் இருக்கும்.....



அதில் முளைத்த

கள்ளிச் செடிகளில்

உன் பெயர் பொறிக்கப்

பட்டிருக்கும்......



பாலையில் பூத்த கள்ளி

வறண்டு கிடக்கும்

உன் பெயரை சொல்லி.......

வந்து படித்துப் போ...



அன்று நீ கண்ணீர்த்துளிகளை

சிந்தி விடாதே...

பாவம் அந்தக் கள்ளியும்

வறண்டே போகட்டும் விட்டு விடு



ஏனென்றால்

உன்னை எதிர்பார்த்து

வா(ழ்)டுவதை விட

அது மாண்டே விடட்டும்.........