Monday, March 22, 2010

பின்னிசையாய்.....

உயர்ந்த மலை ஒன்றின்
உச்சியில்
அமர்ந்திருக்கிறேன் நான்....
புன்னகையோடிய பொய்களின்
ஆடைகளற்று
நிஜங்களின் நிர்வாணத்தோடு....

தலைதடவிப் போகும்
மேகங்களின் வருடலோடு
விழிமூடி ரசித்திருக்கிறேன்
என் மேல் பெய்யும் மழையை...

ஒலிகளற்ற மௌனத்தின்
உன்ன்னதத்தில்
உலகம் மறந்திருந்த நேரத்தில்.......
நடந்தவை அனைத்திற்கும்
மௌன சாட்சியாய் நின்றிருக்கும்
மலையோடு
மனித சாட்சியாய் நானும்.........

பொழியும் மழை
கழுவிப்போகிறது
மனமென்னும் குப்பைத்தொட்டி
சேகரித்து வைத்திருந்த
என் நினைவுகளின் அழுக்குகளை....

உடல்தடவிப் போன
ஊதல் காற்றில்
உயிர் சிலிர்த்த நொடிகளில்
புதிதாய் பிறந்ததாய் உணர்வு...

புதிய நம்பிக்கையோடு
புறப்படுகிறேன்
கீழிறங்கும் வழியெல்லாம்
மலை தாங்கி நிற்கும்
மரங்களின் கிளைகளில்
முளைத்த இலைகளிலிருந்து
விழுகின்றன.....

எனைக்கழுவிப்போன
மழைத்துளிகள்....
என் மனம் பாடும்
பாடலுக்கு
பின்னிசையாய்.....

Wednesday, December 9, 2009

காதல்
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத போதும்
காலம் காலமாய்
கவிதைகளின் கருப்பொருளாய்
கனவுகளின் மெய்ப்பொருளாய்
உணர்வுகளின் உருவகமாய்
உயிர்களுக்குள்ளே
உறவாடிக்கொண்டிருக்கிறது......

மண் மீது இருந்தாலும்
மண்ணோடு விண் தாண்டி
பிரபஞ்சத்தின் எல்லையையும் தாண்டி
பிரவேசிக்கும் வல்லமை
காதலுக்கு மட்டுமே உண்டு.....

இது கடவுளும் அல்ல
ஏனெனில் கடவுள்
அனைவருக்குள்ளும் தோன்றுவதில்லை
இது உணர்வும் அல்ல
ஏனெனில் ஒரு சில மணித்துளிகளில்
ஒய்வு பெற்றுவிட.....

இது வாழ்வும் அல்ல
ஏனெனில் நமக்கான காதல்
என்னோடோ உன்னோடோ
முற்றுப்பெறுவதற்கு
காலம் கடந்தபின்னும்
வாழ்கிறதே சில காதல்கள்......

பின் காதல் என்றால்தான் என்ன?
யோகிக்கு கடவுள்
போகிக்கு காதல்
ரோகிக்கு காமம்
பாவிக்கு பாவம்
இதுதான் காதல்.....

என்றாலும்
இதுவே முற்றான
முடிவும் அல்ல....
எனவே
தேடுவேன் காதலை
எனக்கான வாழ்வின் எல்லை வரைக்கும்..................

Monday, November 16, 2009

நான் சகுனியுமில்லை
நீ தர்மனும் இல்லை
நட்பு சதுரங்கத்தில்
நம்மை வைத்து சூதாட.........

உன்னோடு தேவர்கள் இருக்கலாம்
என்னோடு அசுரர்கள் இருக்கலாம்
ஆனாலும் நீ வாமனனும் இல்லை
நான் மாவலியும் இல்லை
என்னிடம் நீ கேட்டு
நான் தர................

நான் கர்ணனும் இல்லை
நீ துரியோதனனும் இல்லை
அங்க தேசத்தை நீ தரவும்
செஞ்சோற்று கடன் நான் தீர்க்கவும்...........

இருவரும் சாதாரண
மனிதர்கள் மட்டுமே.......
உணர்வுச் சுழல்களில்
உழல்பவர்கள் தானே.......

வெறுப்பது மனித குணம்
பொறுப்பது தேவ குணம்
விரும்புவது தெய்வ குணம்
இருந்தாலும்
நாம் மனிதர்கள்தானே........

நான் தேவனாகவுமில்லை
நீ தெய்வமாகவுமில்லை
எனவே
பிரிவோம் தோழமையே
வெறுப்பெனும் நிழலோடு..